புதுச்சேரி: புதுச்சேரியிலிருந்து உக்ரைனுக்கு படிக்க சென்றோரில் 14 பேர் பத்திரமாக திரும்பி வந்துள்ளனர். டெல்லிக்கு ஐவர் வந்தடைந்துள்ளனர் என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
மீதமுள்ள 8 பேரையும் மீட்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று குறிப்பிட்டார்.
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது:
“உக்ரைன் நாட்டில் படிக்க சென்ற மாணவர்கள் நடைபெறும் போரின் காரணமாக நம்முடைய நாட்டுக்கு திரும்ப நடவடிக்கையை மத்திய அரசு சரியான முறையில் சிறப்பாக எடுத்துள்ளது. அதன் அடிப்படையில் புதுச்சேரியைச் சேர்ந்த 27 மாணவர்கள் அங்கே தங்கி படித்து வந்தார்கள். தற்போது 14 பேர் புதுச்சேரிக்கு திரும்பி வந்துள்ளனர். டெல்லியிலுள்ள புதுச்சேரி அரசு விடுதிக்கு 5 பேர் வந்தடைள்ளனர்.
புதுச்சேரிக்கு அவர்கள் திரும்புவதற்கான நிலையில் அங்குள்ளார்கள். மத்திய அரசு தேவையான அனைத்து உதவியையும் செய்து பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுத்துள்ளது. புதுச்சேரி அரசானது புதுச்சேரியைச் சேர்ந்த மாணவர்கள் புதுவைக்கு பத்திரமாக திரும்ப அத்தனையும் செலவையும் ஏற்கும் என்று அறிவித்திருந்தோம்.
டெல்லியிலிருந்து தற்போது 5 மாணவர்களையும் விமானம் மூலம் புதுச்சேரி வர நடவடிக்கை எடுத்துள்ளது.
மீதமுள்ள 8 மாணவர்களையும் புதுச்சேரிக்கு திரும்பி அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் புதுச்சேரி, ஏனாமைச் சேர்ந்த தலா ஒருவரும், காரைக்கால், மாஹேயைச் சேர்ந்த தலா மூவரும் இருக்கிறார்கள் “என்று தெரிவித்தார்.