புனே-”மெட்ரோ ரயில் இணைப்பு உட்பட பொது போக்குவரத்தை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது,” என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது.இங்குள்ள புனேயில் ௧௧ ஆயிரத்து ௪௦௦ கோடி ரூபாய் செலவில் ௩௨ கி.மீட்டர் துாரம் மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் திட்டத்துக்கு ௨௦௧௬ல் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். முதல்கட்டமாக பணி முடிக்கப்பட்ட 12 கி.மீட்டர் துார பாதையில் மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி நேற்று துவக்கி வைத்தார்.
தொடர்ந்து பல்வேறு நல திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:புனே மெட்ரோ ரயில் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டிய எனக்கு ரயில் சேவையை துவக்கி வைக்கவும் வாய்ப்பு கிடைத்துள்ளது. முன்பெல்லாம் நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்படும். அது எப்போது செயல்பாட்டுக்கு வரும் என்பது யாருக்கும் தெரியாது. அந்த நிலை கடந்த ஏழு ஆண்டுகளில் மாறிஉள்ளது. திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, குறிப்பிடப்பட்ட காலக்கெடுவுக்குள் பணிகள் முடிக்கப்படுகின்றன. இதற்கு புனே மெட்ரோ ரயில் திட்டமே எடுத்துக்காட்டு. நாட்டில் மெட்ரோ ரயில் இணைப்பு உட்பட பொது போக்குவரத்தை மேம்படுத்த மத்திய அரசு அதிக முக்கியத்துவம் கொடுத்து நடவடிக்கை எடுத்து வருகிறது. சொந்த வாகனங்களில் செல்வதை விட மெட்ரோ ரயில் உள்ளிட்ட பொது போக்குவரத்தை மக்கள் அதிகம் பயன்படுத்த வேண்டும்.
நாட்டில் நகரமயமாக்கல் பணி வேகமாக நடந்து வருகிறது.நகரமயமாக்கலில் பல சவால்களும் நிறைந்துள்ளன. போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மேம்பாலங்கள் கட்டலாம். ஆனாலும் எவ்வளவு மேம்பாலங்கள் கட்ட முடியும். அதனால் தான் பொது போக்குவரத்தை பயன்படுத்த மக்கள் பழகிக் கொள்ள வேண்டும். இவ்வாறு பிரதமர் பேசினார்.
இதன்பின் புனேயில் உள்ள சிம்ப்யாசிஸ் பல்கலையின் பொன் விழா ஆண்டு கொண்டாட்டத்தை துவக்கி வைத்து, பிரதமர் மோடி பேசியதாவது: போரால் பாதிக்கப்பட்டு உள்ள உக்ரைனிலிருந்து ‘ஆப்பரேஷன் கங்கா’ திட்டத்தின் வாயிலாக ஆயிரக்கணக்கான இந்தியர்களை பாதுகாப்பாக மீட்டுள்ளோம்.உக்ரைனில் உள்ள தங்கள் நாட்டவர்களை மீட்க பல நாடுகள் திணறி வரும் போது, நம்மால் ஆயிரக்கணக்கானோரை மீட்க முடிந்ததற்கு சர்வதேச அளவில் இந்தியாவின் மதிப்பு அதிகரித்துள்ளதே காரணம். இவ்வாறு பிரதமர் பேசினார்.
புனே மெட்ரோ ரயில் திட்ட விழாவில் மஹாராஷ்டிரா முதல்வரும், சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரே பங்கேற்கவில்லை.சிவாஜி சிலை திறப்பு புனே மாநகராட்சி அலுவலக வளாகத்தில் சத்ரபதி சிவாஜியின் உலோக சிலையை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். மறைந்த கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லட்சுமணின் ஓவிய கண்காட்சியையும் பிரதமர் திறந்து வைத்தார்.மெட்ரோ ரயிலில் பயணம்புனே மெட்ரோ ரயில் சேவையை, நேற்று துவக்கி வைத்த பிரதமர் மோடி, கர்வாரே நிலையத்திலிருந்து ஆனந்த் நகர் வரை மெட்ரோ ரயிலில் டிக்கெட் வாங்கி பயணம் செய்தார். அப்போது உடன் வந்த பள்ளி மாணவ – மாணவியருடன் அவர் கலந்துரையாடினார்.
Advertisement