போர் நிறுத்த தோல்விக்கு உக்ரைனே காரணம்- ரஷிய படைகள் ஆக்ரோ‌ஷமாக குண்டுவீச்சு

கீவ்:

உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போர் தாக்குதல் இன்று 11-வது நாளை எட்டியுள்ளது. உக்ரைனின் முக்கிய நகரங்களில் தாக்குதல் நீடித்தபடி இருக்கிறது.

குறிப்பாக தலைநகர் கீவ், கார்கிவ் நகரங்களில் தாக்குதல் அதிகமாக இருந்து வருகிறது. அதேபோல் மற்ற நகரங்களிலும் ரஷிய படைகள் நுழைந்து தாக்குதலை தொடுத்து வருகின்றன.

முதல் நாள் போரில் ஏவுகணை வீச்சு, வான்வெளி தாக்குதலில் ஈடுபட்ட ரஷிய படை பின்னர் உக்ரைனின் ராணுவ தளவாடங்கள், விமான நிலையங்கள், துறைமுகங்கள், எண்ணை கிடங்கு, எரிவாயு குழாய் ஆகியவற்றை குறிவைத்து தாக்கினர். ரஷிய படைக்கு எதிராக உக்ரைன் ராணுவ வீரர்கள் எதிர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

போர் தொடங்கிய சில நாட்களில் இரு நாடுகள் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது ரஷியாவின் தாக்குதல் வேகம் சற்று குறைந்திருந்தது. ஆனால் பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாததால் ரஷியா மீண்டும் தாக்குதலை தீவிரப்படுத்தியது. இதில் சில நகரங்களை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.

ரஷியாவின் தொடர் தாக்குதலால் உக்ரைனில் லட்சக்கணக்கான மக்கள் வெளியேற முடியாமல் சிக்கிக் கொண்டு உள்ளனர். குண்டுவீச்சு காரணமாக அண்டைநாடுகளின் எல்லைகளுக்கு பயணம் செய்ய அவர்களால் முடியவில்லை.

இதனால் மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதைகள், கட்டிடங்களின் அடித்தளங்களில் தங்கி இருக்கிறார்கள். இதற்கிடையே நேற்று மரியுபோல், வோல்னோவாகா ஆகிய 2 நகரங்களில் போர் நிறுத்தத்தை ரஷியா அறிவித்தது மனிதாபிமான அடிப்படையில் மக்கள் வெளியேற பாதுகாப்பான பாதை அமைப்பதற்காக போர் நிறுத்தம் அறிவிக்கப்படுவதாக தெரிவித்தது.

ஆனால் இந்த போர் நிறுத்த அறிவிப்பு தோல்வியில் முடிந்தது.

மரியுபோல் , வோல்னோ வாகா ஆகிய 2 நகரங்களில் ரஷியா தொடர்ந்து குண்டுகளை வீசியதாக உக்ரைன் குற்றம்சாட்டியது. ரஷிய துருப்புகள் மீது துப்பாக்கிசூடு நடத்தியதால் போர் நிறுத்தம் முறிந்தது என்று ரஷியா தெரிவித்தது.

இந்தநிலையில் இன்று ரஷியா படைகளின் தாக்குதல் கடுமையாக இருந்தது. நேற்று இரவு போர் நிறுத்தம் முறிந்தது என்று ரஷியா அறிவித்தவுடன் நள்ளிரவு முதல் ரஷியா ஆக்ரோ‌ஷ தாக்குதலில் ஈடுபட்டது. முக்கிய நகரங்களை குறி வைத்து ஏவுகணைகள் வீசப்பட்டன.

இந்த தாக்குதல்கள் இடைவிடாமல் நீடித்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இன்று அதிகாலையில் இருந்தே ரஷிய படைகள் தங்களது தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளன.

செர்னிஹிவ் நகரில் குடியிருப்புகள் பகுதிகளில் ரஷியா குண்டுகளை வீசியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்நகர மண்டல ராணுவ நிர்வாக தலைவர் சாஸ் கூறம்போது, ‘‘ரஷிய படையினர் குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து தொடர்ந்து தாக்கினர். இதில் கட்டிடங்கள் கடும் சேதம் அடைந்து இருக்கின்றன’’ என்றார்.

மேலும் செர்னிஹிவ் நகரில் ஏவுகணை வீச்சு தாக்குதலில் 33 பேர் பலியாகி உள்ளனர். அங்கு தொடர்ந்து தாக்குதல் நடந்து வருகிறது. இதனால் மக்கள் பயத்தில் உள்ளனர்.

உக்ரைனின் 2-வது பெரிய நகரான கார்கிவ்விலும் இன்று ரஷியாவின் தாக்குதல் கடுமையாக இருந்து வருகிறது. அங்கு அதிகாலையில் வான்வழி தாக்குதல்கள் நடத்தப்பட்டது. இதில் பல கட்டிடங்கள் தீப்பிடித்து எரிவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அதேபோல் தலைநகர் கீவ்வை குறிவைத்தும் தாக்குதல் நடந்து வருகிறது. மேலும் அந்நகரை வடக்கில் இருந்து ரஷிய படைகள் மிகவும் நெருங்கி உள்ளன.

உக்ரைன் நாட்டில் உள்ள அணு உலை நிலையங்களை கைப்பற்ற ரஷியா தீவிரமாக உள்ளது. முதலில் செர்னோபில் அணு உலை நிலையத்தை ரஷிய படை கைப்பற்றியது.

நேற்று முன்தினம் உக்ரைன் நாட்டில் உள்ள ஐரோப்பியாவின் மிகப்பெரிய அணு மின் நிலையமான ‘ஜபோரிஜியா’ அணு மின் நிலையம் மீது ரஷியபடை தாக்குதல் நடத்தியது. பின்னர் அந்த அணுமின் நிலையம் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக ரஷியா அறிவித்தது.

இந்தநிலையில் உக்ரைனின் 3-வது அணு உலையை கைப்பற்ற ரஷிய படைகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. மிக்கோலேவ் நகரின் வடக்கு பகுதியில் உள்ள அணு உலை நிலையத்தை கைப்பற்ற ரஷிய படைகள் முன்னேறி வருகிறது.

இதுபற்றி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறும்போது, ‘‘ மிக்கோலேவ் நகரில் உள்ள யுஷ்னோகரனின்ஸ்க் அணு உலை நிலையம் தற்போது ஆபத்தில் உள்ளது. அந்த அணு உலை நிலையத்தை முற்றுகையிட ரஷிய படைகள் முன்னேறி வருகின்றன’’ என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்… உக்ரைன் ராணுவத்தில் சேர விருப்பம் தெரிவிக்கும் பிரிட்டன் ராணுவ வீரர்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.