இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் 60 தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டது. முதல் கட்டமாக கடந்த 28ம் தேதி 38 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. மீதமுள்ள 22 தொகுதிகளுக்கு 2வது மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. பாஜ, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த மொத்தம் 92 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கும் முன் பாஜ ஆதரவாளர் அமுபா சிங்(25) தோபால் மாவட்டத்தில் உள்ள காங்கிரஸ் தொண்டரின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு இருவருக்கும் வாய்தகராறு முற்றிய நிலையில் காங்கிரஸ் தொண்டர் துப்பாக்கியால் சிங்கை சுட்டுள்ளார். இதில் அவர் உயிரிழந்தார்.இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கரோங்க் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வன்முறை ஏற்பட்டது. சிலர் வாக்கு இயந்திரத்தை கைப்பற்ற முயன்றதால், போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் ஒருவர் பலியானார். இதற்கிடையே, மாலை 5 மணி நிலவரப்படி, 2ம் கட்ட தேர்தலில் 76.04 சதவீத வாக்குகள் பதிவாகின. வரும் 10ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.உபி.யில் நாளை இறுதிக் கட்ட வாக்குப்பதிவு: உத்தரப் பிரதேசத்தில் இதுவரை 6 கட்ட தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. மிச்சமுள்ள 54 தொகுதிகளில் நாளை இறுதிக்கட்ட தேர்தல் நடக்கிறது. இதற்கான பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது.