கொல்கத்தா: உத்தர பிரதேச சட்டப்பேரவைக்கு நாளை இறுதிக்கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இதில், சமாஜ்வாடி கட்சிக்காக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்ட மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, நேற்று முன்தினம் மாலை வாரணாசியில் இருந்து கொல்கத்தாவுக்கு தனி விமானத்தில் பயணம் செய்தார். அப்போது, நடுவானில் விமானம் திடீரென கடுமையாக குலுங்கியது. இதனால், மம்தா உள்ளிட்டோர் அதிர்ச்சி அடைந்தனர். விமானி சாதூர்யமாக செயல்பட்டு, விமானத்தை பத்திரமாக இயக்கி தரையிறக்கினார். இந்நிலையில். நடுவானில் விமானம் கடுமையாக குலுங்கியது எப்படி என்பது தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும் என்று திரிணாமுல் காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது. மேலும், இது குறித்து அறிக்கை அளிக்கும்படி சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்துக்கும் மேற்கு வங்க அரசு கடிதம் அனுப்பியுள்ளது.