இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி மொகாலியில் நடைபெற்றது. நேற்றுமுன்தினம் 4-ந்தேதி போட்டி தொடங்கியது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இந்திய, முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்பிற்கு 574 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. ஜடேஜா ஆட்டமிழக்காமல் 175 ரன்கள் குவித்தார்.
பின்னர், இலங்கை அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. இன்றைய 3-வது நாள் ஆட்டத்தில் ஜடேஜா ஐந்து விக்கெட் வீழ்த்த இலங்கை அணி 174 ரன்னில் சுருண்டு பாலோ-ஆன் ஆனது. இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா இலங்கை அணியை தொடர்ந்து பேட்டிங் செய்ய அனுமதித்தார்.
2-வது இன்னிங்சிலும் இலங்கை பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். தொடக்க வீரர் லஹிரு திரிமன்னே ரன்ஏதும் எடுக்காமல் அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்தார். திமுத் கருணாரத்னே 27 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த நிசாங்கா 7 ரன்னிலும், மேத்யூஸ் 28 ரன்னிலும், டி சில்வா 30 ரன்னிலும் வெளியேறினர். விக்கெட் கீப்பர் டிக்வெல்லா மட்டும் தாக்குப்பிடித்து விளையாடி அரைசதம் அடித்தார்.
முதல் இன்னிங்சில் அபாரமாக பந்து வீசிய ஜடேஜா 2-வது இன்னிங்சிலும் அசத்தினார். சுரங்கா லக்மல் (0), எம்புல்டேனியா (2) ஆகியோரை எளிதில் வீழ்த்தினார்.
அரைசதம் அடித்த டிக்வெல்லா கடைசி வரை போராடினாலும், அதற்கு எந்தவித பலனும் கிடைக்காமல் போனது. இலங்கை அணி 60 ஓவரில் 178 ரன்கள் எடுத்து ஆல்-அவட் ஆனது. இதனால் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
2-இன்னிங்சில் டிக்வெல்லா 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்க அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினர்.