இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி மொகாலியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. ஜடேஜா ஆட்டமிழக்காமல் 175 ரன்களும், ரிஷாப் பண்ட் 96 ரன்களும் விளாசி இந்தியா முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்பிற்கு 574 ரன்கள் குவித்த நிலையில் டிக்ளேர் செய்தது.
பின்னர் இலங்கை அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் இலங்கை 4 விக்கெட் இழப்பிற்கு 108 ரன்கள் எடுத்திருந்தது. நிசாங்கா 26 ரன்களுடனும், அசலாங்கா 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. நிசாங்கா ஒருபுறம் நிலைத்து நின்று விளையாட மறுபக்கம் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. இதனால் இலங்கை அணி 174 ரன்னில் சுருண்டது. நிசாங்கா மட்டும் 61 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்திய அணி சார்பில் ஜடேஜா ஐந்து விக்கெட்டுகள் சாய்த்தார். அஸ்வின், பும்ரா தலா 2 விக்கெட்டும், முகமது ஷமி ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார். இந்தியா முதல் இன்னிங்சில் 400 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. இந்தியா பாலோ-ஆன் கொடுத்ததால் இலங்கை தொடர்ந்து 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது.