பிரபல பாலிவுட் நடிகை சோனாக்சி சின்ஹாவுக்கு ஜாமினில் வெளியே வர முடியாத பிடிவாரன்ட் பிறப்பித்து மொரதாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
பிரபல ஹிந்தி நடிகை
சோனாக்சி சின்ஹா
, தமிழில், லிங்கா படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக நடித்தவர். பிரபல ஹிந்தி நடிகர் சத்ருகன் சின்ஹாவின் மகளான இவர், ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு, தலைநகர் டெல்லியில் நடந்த விருது வழங்கும் விழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க சோனாக்சி சின்ஹா அழைக்கப்பட்டிருந்தார். அந்த விருது நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்பதற்காக சோனாக்சி சின்ஹாவுக்கு 4 தவணைகளில் 37 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டு இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் அந்த நிகழ்ச்சிக்கு செல்ல கடைசியில் சோனாக்சி சின்ஹா மறுத்திருக்கிறார். வாங்கிய பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் அவர் இருந்திருக்கிறார் .
இதை அடுத்து நடிகை சோனாக்சி சின்ஹா மீது உத்தர பிரதேச மாநிலம் மொரதாபாத் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து மொரதாபாத் போலீசார் நடிகை சோனாக்சி சின்ஹா உட்பட 3 பேர் மீது கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த மொரதாபாத் நீதிமன்றம், பாலிவுட் நடிகை சோனாக்சி சின்ஹாவுக்கு ஜாமினில் வெளியே வர முடியாத பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டு உள்ளது.