கீவ்,
உக்ரைன் மீது ரஷியா உக்கிரமாக போர் தொடுத்து வந்தாலும், சமரச பேச்சுவார்த்தைக்கு அந்த நாடு முக்கியத்துவம் அளித்து வருகிறது. அந்த வகையில் கடந்த மாதம் 28-ந்தேதி மற்றும் கடந்த 3-ந்தேதி என 2 கட்டங்களாக இருநாடுகளுக்கு இடையில் சமரச பேச்சுவார்த்தை நடந்தது. 3-வது கட்ட பேச்சுவார்த்தை வரும் திங்கள் கிழமை நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் ரஷியாவுடனான சமரச பேச்சுவார்த்தையில் பங்கேற்ற உக்ரைன் அதிகாரி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
டெனிஸ் கிரீவ் என்கிற அந்த அதிகாரி தலைநகர் கீவில் உள்ள கோர்ட்டுக்கு துப்பாக்கி குண்டு காயங்களுடன் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். இந்த தகவலை உக்ரைன் பத்திரிகையாளர் ஒருவர் சமூகவலைத்தளத்தில் தெரிவித்தார். எனினும் டெனிஸ் கிரீவ் எந்த சூழ்நிலையில் கொலை செய்யப்பட்டார். அவரை கொலை செய்தது யார் என்பன உள்ளிட்ட தகவல்கள் வெளியாகவில்லை.