உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் 11வது நாளாக இன்று நீடித்து வருகிறது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தொடர்ந்து வரும் நிலையில், இன்னும் பல லட்சம் மக்கள் தங்களின் உயிர் மற்றும் உடைமைகளைப் பாதுகாத்துக்கொள்ள உக்ரைனிலிருந்து அகதிகளாக அண்டை நாடுகளுக்கு வெளியேறி வருகிறார்கள். ரஷ்யா உக்ரைனின் முக்கிய நகரங்களில் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தி வருகிறது.
இந்தநிலையில் இது குறித்து ஐ.நா. அகதிகள் பிரிவின் உயர் கமிஷனர் பிலிப்போ கிராண்ட்டி கூறியதாவது , ‘‘கடந்த 10 நாள்களில் உக்ரைனிலிருந்து 15 லட்சம் பேர் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு வெளியேறி உள்ளனர். இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய அகதிகள் நகர்வு இதுவாகும். போலந்து, ஹங்கேரி, மால்டோவா, ஸ்லோவேகியா ஆகிய நாடுகளுக்கு உக்ரைன் மக்கள் அகதிகளாகச் செல்கின்றனர்” என்கிறார்.