உக்ரைன்
மீதான போரை ரஷ்யா கைவிட வேண்டும் என ஐ.நா., சபை, உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ஐ.நா., சபை தங்களால் இயன்ற முயற்சிகளை, செய்து பேச்சுவார்த்தை மூலம் இதற்கு தீர்வு காண வலியுறுத்தி வருகிறது.
இந்த சூழலில் உக்ரைன் – ரஷ்யா இடையேயான முதல் கட்ட பேச்சுவார்த்தை பெலாரஸ் நாட்டின் எல்லை நகரமான கோமலில் கடந்த மாதம் 28ஆம் தேதி நடைபெற்றது. சுமார் ஐந்து மணி நேரம் நடைபெற்ற அந்த முதற்கட்ட பேச்சுவார்த்தையில், எந்த உறுதியான முடிவும் எடுக்கப்படவில்லை. ஆனால், இரு நாட்டு பிரநிதிகளும் சில விஷயங்களை ஒப்புக் கொண்டுள்ளதாக தெரிகிறது.
அதன் தொடர்ச்சியாக, கடந்த 3ஆம் தேதி இரு நாட்டு பிரதிநிதிகளுக்கும் இடையே இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனாலும், போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஆக்கப்பூர்வமான முடிவுகள் எதுவும் இதுவரை எடுக்கப்படவில்லை. எனவே 3ஆவது கட்டமாக பேச்சுவார்த்தை நடத்த இருதரப்பும் முடிவு செய்துள்ளன.
மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை எப்போது? உக்ரைன் மீது ரஷ்யா குற்றச்சாட்டு
இந்த பேச்சுவார்த்தை வருகிற 7ஆம் தேதி பெலாரஸ் நாட்டில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் பேச்சுவார்த்தையை தாமதப்படுத்துவதற்கான சாக்குப்போக்குகளை உக்ரைன் தொடர்ந்து முன்வைப்பதாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோ குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த நிலையில், ரஷ்யாவுடன் சமரச பேச்சுவார்த்தையில் பங்கேற்ற உக்ரைன் அதிகாரி ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
டெனிஸ் கிரீவ்
என்கிற அந்த அதிகாரி தலைநகர் கீவில் துப்பாக்கி குண்டுகளுடன் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். எனினும் டெனிஸ் கிரீவ் எந்த சூழ்நிலையில் கொலை செய்யப்பட்டார். அவரை கொலை செய்தது யார் என்பன உள்ளிட்ட தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
உக்ரைன் ரஷ்யா இடையேயான பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், பேச்சுவார்த்தையில் பங்கேற்ற உக்ரைன் அதிகாரி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.