உக்ரைனை விட மிகப் பெரிய படை, அதிக தளவாடங்கள் என பல வசதிகள் இருந்தும், ரஷ்யப் படைகள் வேகமாக முன்னேற முடியாமல் திணறுகின்றன.
உக்ரைனில் உள்ள ரயில் பாதையை பயன்படுத்த முடியாததே இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, ரஷ்யா போர் தொடுத்துள்ளது. போர் துவங்கி, 11 நாட்களாகியும், ரஷ்யப் படைகளால் பெரிய அளவில் முன்னேற்றம் காண முடியவில்லை.
இது குறித்து ராணுவத் துறை நிபுணர்கள் கூறியுள்ளதாவது:ரஷ்ய ராணுவத்துக்கு முக்கிய பலம் ரயில் பாதைகளே. வீரர்கள் மற்றும் படைக்குத் தேவையான பொருட்களை விரைவாக எடுத்துச் செல்வதற்கு ரயில் பாதைகளையே ரஷ்ய ராணுவம் பயன்படுத்தி வந்துள்ளது.உக்ரைன் பரப்பளவில் சற்று பெரிய நாடு தான். ரஷ்யாவில் உள்ளது போன்றே இங்குள்ள ரயில் பாதைகளும் அமைந்துஉள்ளன.
ஆனால், உக்ரைனின் முக்கிய நகரங்களை கைப்பற்றினால் மட்டுமே, அங்குள்ள ரயில் பாதைகளை தன் கட்டுக்குள் ரஷ்யாவால் கொண்டு வர முடியும்.ரயிலையே நம்பியுள்ளதால், பொருட்களை எடுத்துச் செல்வதற்கு தேவையான டிரக்குகள் ரஷ்யாவிடம் அதிகம் இல்லை. போரின்போது படைக்குத் தேவையான பெட்ரோல் மற்றும் குடிநீர் வசதிக்காக, தற்காலிகமாக ‘பைப் லைன்’ அமைப்பதும் ரஷ்யாவின் வழக்கம்.
தற்போது ஒரு குறிப்பிட்ட நகரைக் கைப்பற்றி, அடுத்த நகருக்கு செல்லும்போது, உள்ளூர் மக்கள் அந்த பைப் லைன்களை சேதப்படுத்தாமல் இருக்க வேண்டும். பாதுகாப்புக்காக ஏற்கனவே கைப்பற்றிய நகரில் அதிக வீரர்களை நிறுத்தி வைக்கும் அளவுக்கு வீரர்களையும் ரஷ்யா அனுப்பவில்லை.
ரஷ்ய படையில் ஒரு பிரிகேட் என்பது, அதிகபட்சம் 5,000 வீரர்கள், 400 வாகனங்கள் அடங்கியது. எதிரிகள் தாக்குதலில் சிக்காமல் இருக்க, வாகனங்களுக்கு இடையே, 150 அடி இடைவெளி விட்டே பயணிக்க முடியும். அதன்படி பார்த்தால் ஒரு பிரிகேட், 20 கி.மீ., நீளத்துக்கு இருக்கும்.முதலில் செல்லும் வாகனத்துக்கு தேவையான எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களை அனுப்ப வேண்டும். இவ்வாறு மாறி மாறி எடுத்துச் செல்ல வேண்டியிருப்பதால் பயண நேரம் அதிகமாகிறது.
மேலும் உக்ரைனில் ஏற்கனவே உள்ள சாலைகளையே ரஷ்யப் படைகள் பயன்படுத்துகின்றன. மணல் பகுதிகள் வழியாக சென்றால் வாகனங்கள் சிக்கிக் கொள்ளும் அபாயம் உள்ளது.இதனால் உணவு, குடிநீர், வாகனங்களுக்கான எரிபொருள் ஆகியவை போதிய அளவில் கிடைக்கவில்லை. அவற்றை ரஷ்யாவால் ‘சப்ளை’ செய்ய முடியவில்லை. ரஷ்ய படைகள் முன்னேற முடியாததற்கு இது ஒரு முக்கிய காரணமாக உள்ளது.
ஒரு நகரில் இருந்து மற்றொரு நகருக்குள் ரஷ்யப் படைகள் செல்வதற்குள், முந்தைய நகரத்தை உக்ரைன் மீண்டும் பிடித்து விடுகிறது. இது மற்றொரு சிக்கல்.முதல் வாரத்தில் தான் சந்தித்த இந்த சவால்களை ஆய்வு செய்து, அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை ரஷ்யா எடுத்து உள்ளது. அதன்படியே, கார்கிவ் நகரைக் கைப்பற்றுவதே அதன் தற்போதைய இலக்கு.
அந்நகரை கைப்பற்றி விட்டால், ரயில் பாதைகளை ரஷ்யப் படைகள் பயன்படுத்த முடியும்.வீரர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், பெட்ரோல் மற்றும் தளவாடங்களை சுலபமாக அனுப்பி வைக்க முடியும். அதன்பின் ரஷ்யப் படையின் வேகம் தீவிரமாக இருக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.