அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கும்
நேட்டோ
அமைப்பில், தங்களது மிக நெருங்கிய நாடான
உக்ரைன்
இணைவது தங்களது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று
ரஷ்யா
கூறி வருகிறது. எனவே, உக்ரைனை தங்களுடன் இணைத்துக்கொள்ள மாட்டோம் என்று நேட்டோ அமைப்பு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று ரஷ்யா வலியுறுத்தி வருகிறது. எனினும், இதற்கு அமெரிக்காவும் நேட்டோவும் சம்மதிக்கவில்லை.
இதனிடையே, எல்லையில் படைகளை குவித்து வந்த ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளது. ரஷ்யாவின் போர் நடவடிக்கைக்கு அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. பேச்சுவார்த்தை மூலம் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என ஐ.நா., வேண்டுகோள் விடுத்து வருகிறது.
இதனிடையே, ரஷ்யாவுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பல்வேறு நாடுகள் அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. தங்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ள நாடுகள் மீது பதிலுக்கு ரஷ்யாவும் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
முன்னதாக, உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கை குறித்த அறிவிப்பை வெளியிடும்போது, அந்த நடவடிக்கைகளைத் தடுக்க மேற்கத்திய நாடுகள் முயன்றால் வரலாற்றில் இதுவரை காணாத மிக மோசமான எதிா்விளைவுகளை அந்த நாடுகள் சந்திக்க வேண்டியிருக்கும் என்று ரஷ்ய அதிபர்
விளாடிமர் புடின்
எச்சரிக்கை விடுத்திருந்தாா். மேலும், தற்போது அணு ஆயுதங்களை தயார் நிலையில் வைத்திருக்குமாறும் ரஷ்ய படைகளுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார். இதனால், உக்ரைன் – ரஷ்யா ஆகிய இரு நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தாலும், பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை எப்போது? உக்ரைன் மீது ரஷ்யா குற்றச்சாட்டு
அதேசமயம், இந்தச் சூழலில், தங்கள் நாட்டின் மீது விமானங்கள் பறக்கத் தடை விதிப்பதாக நேட்டோ நாடுகள் அறிவிக்க வேண்டும் என்று உக்ரைன் அதிபர் வேண்டுகோள் விடுத்தார். ஒரு நாட்டின் வான் எல்லையில்
விமானங்கள் பறக்க தடை
விதிப்பதாக (நோ ஃப்ளை ஸோன்) அறிவிப்பது, எதிரி நாட்டு போா் விமானங்கள் அந்த நாட்டில் தாக்குதல் நடத்துவதைத் தடுத்து நிறுத்துவதற்காக எடுக்கப்படும் நடவடிக்கை ஆகும். அவ்வாறு அறிவிக்கப்பட்ட பிறகு அந்தப் பகுதியில் விமானங்கள் பறந்தால், அந்த விமானங்களை தடை விதித்துள்ள நாடு இடைமறித்து தாக்கி அழிக்க வேண்டும். விமான எதிா்ப்பு ஏவுகணைகளைக் கொண்டோ, தாக்குதல் விமானங்களைக் கொண்டே இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
உக்ரைன் அதிபரின் வேண்டுகோளை ஏற்று அதுபோன்று நேட்டோ நாடுகள் அறிவித்தால், உக்ரைன் மீது தாக்குதல் நடத்த ரஷ்ய விமானங்கள் வரும்போது நேட்டோ படைகள் அவற்றை தாக்கி அழிக்க வேண்டியிருக்கும். இது ரஷ்யாவுக்கும் நேட்டோ நாடுகளுக்கும் இடையேயான போராக மாறி விடும் அபாயம் உள்ளது.
எனவே, உக்ரைன் அதிபரின் கோரிக்கையை நேட்டோ அமைப்பு நிராகரித்து விட்டது. உக்ரைன் போா் மற்ற நாடுகளுக்கும் பரவும் அபாயத்தை ஏற்படுத்தும் எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளப் போவதில்லை என்று நேட்டோ திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டது. இதற்கு உக்ரைன் அதிபர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், உக்ரைன் எல்லையில் விமானங்கள் பறக்க தடை விதிக்கும் நாடுகள், தற்போது அந்த நாட்டில் நடைபெற்று வரும் போரில் நேரடியாகப் பங்கேற்பதாக அா்த்தம் என்று ரஷ்ய அதிபர் விளாடிமர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.