ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள மார்க்கெட்டில் இன்று பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். மார்க்கெட் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மற்றும் ராணுவத்தினரை நோக்கி கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் பொதுமக்கள் தரப்பில் ஒருவர் உயிரிழந்தார். போலீஸ்காரர் உள்ளிட்ட 24 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இறந்து போனவர் நவ்கட்டா பகுதியைச் சேர்ந்த முகமது அஸ்லாம் மக்தூமி (வயது 70) என தெரியவந்தது.
தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். தகவல் அறிந்த போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அப்பகுதி முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது.
இந்த தாக்குதலுக்கு மாநில ஆளுநர் மனோஜ் சின்கா மற்றும் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.