பெங்களூரு: கர்நாடகாவின் கல்வி நிலையங்களில் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிவதற்கு எதிராக ஏபிவிபி மாணவ அமைப்பினர் காவி துண்டு போராட்டம் நடத்தினர். இதுகுறித்து பத்திரிகையாளர் ராணா அயூப் பிபிசி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், போராட்டக்காரர்களை இந்துத்துவ தீவிரவாதிகள்’ என குறிப்பிட்டார்.
இதுகுறித்து தார்வாட் மாவட்டத்தை சேர்ந்த பஜ்ரங் தளம் நிர்வாகி அஷ்வத் கடந்த பிப்ரவரி 25-ம் தேதி போலீஸில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் தார்வாட் போலீஸார், பத்திரிகையாளர் ராணா அயூப் மீது எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து பத்திரிகையாளர் ராணா கூறுகையில், ‘‘கர்நாடக போலீஸாரின் இந்த நடவடிக்கையின் மூலம் நான் உண்மை பேசுவதை நிறுத்த முடியாது. இவ்வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்வேன்’’ என்றார். கடந்த வாரத்தில் ஹிஜாப் வழக்கை விசாரித்த நீதிபதியை விமர்சித்ததாக கன்னட நடிகர் சேத்தன் கைது செய்யப்பட்டார்.