உக்ரைன் – ரஷ்யா இடையிலான போரில், சுமார் 11 ஆயிரம் ரஷ்ய வீரர்கள் உயிரிழந்ததாக உக்ரைன் தெரிவித்துள்ள நிலையில், அந்நாடு சண்டையைத் தொடர்ந்தால் அவர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகும் என ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் 11ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், இருதரப்பு மட்டுமின்றி வெளிநாட்டினரும் உயிரிழந்துள்ளனர். ரஷ்யாவின் தாக்குதல் காரணமாக உக்ரைனில் பொருளாதாரம் முற்றாக முடங்கி மனிதாபிமான நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. அதே போல், மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது தொடர்ந்து பொருளாதார தடைகளை விதித்துள்ளதால் ரஷ்ய மக்களும் பாதிப்பிற்குள்ளாகி உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், போரில் ரஷ்ய வீரர்கள் 11 ஆயிரம் பேர் வரை உயிரிழந்துள்ளதாக உக்ரைன் ராணுவம் அறிவித்துள்ளது. உக்ரைனின் தெற்கு பகுதியில் கருங்கடலுக்கு அருகே உள்ள மைகோலைவ் நகரில் ரஷ்ய படைகள் தீவிர தாக்குதலில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதேபோல், தற்காலிக போர் நிறுத்தம் முடிந்த நிலையில், துறைமுக நகரான மரியுபோலிலும் ரஷ்ய படைகள் குண்டுகளை வீசி தாக்கி வருகின்றனர். அந்நாட்டில் முக்கிய நகரங்களில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அங்கு சிக்கியுள்ள மக்களை பாதுகாப்பாக வெளியேற்றும் வகையில் மனிதாபிமான வழித்தடம் அமைக்க வேண்டும் என உலக நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன.
இந்த போரில், பொதுமக்கள் மீது தங்கள் ராணுவம் குறி வைப்பதில்லை என ரஷ்ய அரசு தெரிவித்து வரும் நிலையில், பல்லாயிரக்கணக்கான மக்கள் போர் சூழலில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
அப்பகுதிகளில் தண்ணீர் இன்றியும், உணவின்றியும் ஏராளாமானோர் தவித்து வரும் நிலையில், மக்களை வெளியேற விடாமல் உக்ரைன் ராணுவம் தடுப்பதாக ரஷ்யா குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும், போரில் இருந்து தங்களை தற்காத்துக்கொள்ள இதுவரை 15 லட்சம் பேர் உக்ரைனை விட்டு வெளியேறி உள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், உக்ரைன் இன்னும் சண்டையைத் தொடர்ந்தால் அந்நாட்டின் எதிர்காலமே கேள்விக்குறியாகும் என ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து பேசிய அவர், உக்ரைன் அதிகாரிகள் தற்போதைய நடவடிக்கையை தொடர்ந்தால் நாட்டின் நிலைமை மிகவும் மோசமாகி, அது ஒரு நாடாக தொடர்வது கூட சிக்கலாகிவிடும் என்றார். இதனிடையே, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, மேற்கத்திய நாடுகளிடம் போர் விமானங்கள் உள்ளிட்ட ராணுவ தளவாடங்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.