வாஷிங்டன்: அமெரிக்க போர் விமானங்களில் சீனக் கொடிகளை பறக்கவிட்டு ரஷ்யாவில் குண்டு வீசுங்கள் என்று டொனால்டு ட்ரம்ப் தெரிவித்தார்.
உக்ரைன் மீது ரஷ்யா ராணுவத் தாக்குதலை நடத்தி வருகிறது. போர் என்று அறிவிக்காமல் சிறப்பு ராணுவ செயல்பாடு என்ற பெயரில் உக்ரைன் மீது கடந்த 11 நாட்களாக ரஷ்ய ராணுவம் தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் அந்த நாட்டிலிருந்து ஏராளமான மக்கள் அகதிகளாக வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்து வருகின்றனர்.
இதனிடையே அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது குடியரசுக் கட்சி நிர்வாகிகளுடன் நேற்று வாஷிங்டனில் ஆலோசனை நடத்தினார். அப்போது ட்ரம்ப் பேசியதாவது: ரஷ்யா மீது எந்தக் காரணத்தை கொண்டும் தாக்குதல் நடத்த மாட்டோம் என்று அதிபர் ஜோ பைடன் கூறி வருகிறார். இப்படி பேசுவதை முதலில் அவர் நிறுத்த வேண்டும். மனிதநேயத்துக்கு எதிராக ரஷ்யா செயல்படுவதை அனு மதிக்கக் கூடாது. நேட்டோ என்பது வெறும் காகிதப் புலியாக செயல்பட்டு வருவது வருத்த மளிக்கிறது.
உக்ரைன் மீதான போரை நிறுத்த ஒரே வழிதான் இருக்கிறது. அமெரிக்க போர் விமானங்களில் சீனக் கொடிகளை பறக்கவிட்டு ரஷ்யா மீது குண்டுகளை வீச வேண்டும். பிறகு ரஷ்யாவும், சீனாவும் ஒன்றையொன்று தாக்கிக் கொள்ளும். நாம் நிம்மதியாக வேடிக்கை பார்க்கலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.