மதுரை: ‘‘முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் கேரளா அரசு இஷ்டம் போல் செயல்பட முடியாது’’ என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அதேவேளையில், சசிகலா குறித்த கேள்விக்கு பதில் அளிக்காமல் தவிர்த்தார்.
அதிமுக தேனி மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் சசிகலா, தினகரனை மீண்டும் கட்சியில் சேர்க்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியதும், அதன் நகலைகூட்டத்தில் இருந்த ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திடம் வழங்கினர். அதேபோல், ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா, சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்ப்பதே கட்சித் தொண்டர்கள் விருப்பமாக உள்ளது என்றும், அதற்கான ஏற்பாடுகளை தானே முன்னின்று செய்து வருவதாக கூறி சசிகலாவை நேரிலேயே சந்தித்தார். மேலும், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இரண்டு முறை ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து இதுதொடர்பாக ஆலோசனையும் செய்தார்.
இப்படியான சூழலுக்கு மத்தியில், இன்று மதுரை வந்தார் ஓ.பன்னீர்செல்வம். மதுரை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் எந்த ஒரு திட்டமும் தொடங்கப்பட வேண்டும் என்றால், தமிழ்நாட்டினுடைய அனுமதி பெற்றுதான் தொடங்க முடியும். கேரள அரசின் இஷ்டம்போல் செயல்படுத்த முடியாது. இந்தியாவில் மற்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து மகளிருக்கும் உலக மகளிர் தின வாழ்த்துகள். தாய்மார்கள், சகோதரிகள் அனைத்து சகோதரிகளுக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்’’ என்றார்.
பேட்டியின்போது செய்தியாளர்கள், சசிகலா அதிமுகவில் இணைப்பது குறித்த கேள்வியை கேட்டபோது, ”அய்யோ சாமி” என்று கூறியபடி, ஓ.பன்னீர்செல்வம் அதற்கு பதில் அளிக்காமல் தவிர்த்துச் சென்றார்.