ஆள்மாறாட்டம், சிறுமி பாலியல் வன்கொடுமை; அதிர்ந்த அண்ணன்… சிக்கிய தம்பி – நடந்தது என்ன?

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுகாவைச் சேர்ந்தவர் மாதவன் (36). இவர் வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது, “என் அப்பா விவசாயம் செய்து வருகிறார். அம்மா 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். எனக்கு இரண்டு தம்பிகள். மூத்த தம்பி சிங்கப்பூரில் இருக்கிறான். இரண்டாவது தம்பி தர்மலிங்கம் (30). அவனுக்கு திருமணமாகிவிட்டது. அதன்பிறகு அவன் வெளிநாட்டில் ஒரு பெண்ணை திருமணம் செய்தததாக தெரியவந்தது. அதன்பிறகு இரண்டு பெண்களை திருமணம் செய்து அவர்களுடனும் வாழாமல் பிரிந்து விட்டான்.

கைது

என் மனைவியுடன் என்னுடைய தம்பிக்கு ஏற்பட்ட தவறான நட்பால் என் குடும்ப வாழ்க்கை சீர்குலைந்து விட்டது. அதனால் நான் என்னுடைய மனைவியைப் பிரிந்து தனியாக பள்ளிக்காரணையில் குடிசை வீட்டில் வசித்து வருகிறேன். தற்போது கழிவு நீர் லாரி டிரைவராக வேலை செய்து வருகிறேன். என்னுடைய தம்பி தர்மலிங்கம் கடந்த 2007-ம் ஆண்டு என்னுடைய பள்ளிச் சான்றிதழை எனக்குத் தெரியாமல் எடுத்து என் பெயரில் பாஸ்போர்ட், லைசென்ஸ் எடுத்து அதன்மூலம் வெளிநாடு சென்று வந்திருக்கிறான். கடந்த 2012-ம் ஆண்டு வண்ணாரப்பேட்டையில் 16 வயது சிறுமியை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் அவனின் பெயரை தருண் என்றும் மாதவன் என்றும் பொய்யாகக் கூறியிருக்கிறான். அந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைக்குச் சென்ற என்னுடைய தம்பி, ஜாமீனில் வெளியில் வந்தபிறகு நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாகிவிட்டான்.

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக பத்திரிகையில் வெளியான செய்தியைப் பார்த்தப்பிறகுதான் என்னுடைய பெயரை தம்பி தர்மலிங்கம் பயன்படுத்திய விவரம் தெரியவந்தது. உடனே நான் என்னுடைய சொந்த ஊரான அரிமழம் காவல் நிலையத்தில் புகாரளித்தேன். அப்போது அவன் சிங்கப்பூரில் இருந்ததால் போலீஸார் வழக்கு போட்டார்களா என்று எனக்குத் தெரியவில்லை. என் பெயரில் வாரண்ட் உள்ளதால் என்னை விசாரித்தபோதுதான் என் தம்பி என்னுடைய சான்றிதழை பயன்படுத்தி பாஸ்போர்ட் எடுத்து வெளிநாடு சென்ற தகவலையும், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த விவரத்தையும் தெரிவித்தேன்.

பாலியல் வன்கொடுமை

எனவே என் பெயரை பயன்படுத்தி ஆள்மாற்றம் செய்து வரும் என்னுடைய தம்பி தர்மலிங்கம் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா, 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தர்மலிங்கத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து வண்ணாரப்பேட்டை போலீஸார் கூறுகையில், “சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மாதவன் என்பவர் நீண்ட காலமாக தலைமறைவாக இருப்பது தெரியவந்தது. அவர் குறித்து விசாரித்தபோது எந்த தகவலும் தெரியவில்லை. இந்தச் சூழலில்தான் மாதவன் இருக்கும் இடம் தெரிந்ததும் அங்கு சென்று விசாரித்தபோதுதான் ஆள்மாறாட்டம் தகவல் தெரியவந்தது. இதையடுத்து மாதவன் அளித்த தகவலின்படியும் செல்போன் சிக்னல் அடிப்படையிலும் தர்மலிங்கத்தைக் கைது செய்துள்ளோம். தொடர்ந்து அவனிடம் விசாரித்து வருகிறோம்” என்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.