கீவ்: உக்ரைனுக்கு இந்தியா அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி என அந்நாட்டு பிரதமர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் ஏராளமான இந்தியர்கள் சிக்கியுள்ள நிலையில் அவர்களை உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு வரவழைத்து அங்கிருந்து விமானம் மூலம் அழைத்து வரும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்காக ஆபரேஷன் கங்கா என்ற பெயரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆபரேஷன் கங்கா திட்டத்தின் கீழ் இதுவரை 15,900 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். கார்கிவ் மற்றும் சுமியைத் தவிர, உக்ரைனின் மீதமுள்ள பகுதிகளில் இருந்து கிட்டத்தட்ட அனைத்து இந்தியர்களும் வெளியேற்றப்பட்டு இந்தியா அழைத்து வரப்பட்டுள்ளனர். சுமி நகரில் தற்போது சண்டை அதிகரித்துள்ளது. அங்குள்ள மாணவர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார். இதனைத் தொடர்ந்து ஜெலன்ஸ்கி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:
“ரஷ்ய ஆக்கிரமிப்பை உக்ரைன் எதிர்கொள்வது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். போரின் போது இந்திய குடிமக்களுக்கு வழங்கிய உதவிக்கு பாராட்டு தெரிவித்தார். எங்களது அமைதியான உரையாடலில் இந்தியர்களை மீட்கும் பணியில் உக்ரைனின் அர்ப்பணிப்பை பிரதமர் மோடி பாராட்டினார். உக்ரேனிய மக்களுக்கு இந்தியா அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.