புதுடெல்லி: உக்ரைனில் இருந்து இதுவரை சுமார் 1,200 தமிழக மாணவர்கள் நாடு திரும்பினர். இதனிடையே, நாடு திரும்பும் இந்திய மாணவர்கள் தங்களது செல்லப் பிராணிகளுடன் வருகை புரிவது அதிகரித்துள்ளது. தமிழக மாணவர்கள் சிலர் தங்களின் வளர்ப்பு நாய்கள் மற்றும் பூனைகளுடன் டெல்லியிலிருந்து விமானத்தில் அனுமதி கிடைக்காதமையால் ரயிலில் தமிழகம் திரும்புகின்றனர்.
உக்ரைனில் போர் தொடங்கிய பின்னர், அங்கிருந்து இந்திய மாணவர்களை தாயகத்துக்கு அழைத்து வரும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஒரு மாணவர் தன்னுடைய செல்ல நாயுடன்தான் நாடு திரும்புவேன் என அடம்பிடித்தார். அவருக்கு பீட்டா அமைப்பும் ஆதரவளித்து கொடுத்த குரலை மத்திய அரசும் ஏற்றது. இதனால், தம் நாயுடன் வீடு அந்த மாணவர் வீடு திரும்பி இருந்தார். இந்தச் செய்தியும் வைரலாகப் பரவி இருந்தது.
இந்த நிலையில், தமிழகத்தின் பென்னாகரத்தைச் சேர்ந்த மாணவர் கவுதமும் தன்னுடைய பூனைக்குட்டியுடன் வீடு திரும்பினார். இதன் தாக்கமாக, உக்ரைனின் பல்வேறு மருத்துவப் பல்கலைழகங்களில் பயிலும் இந்திய மாணவர்களும் தங்களது செல்லப்பிராணிகளுடன் இந்தியா வரத் தொடங்கியுள்ளனர். கடந்த ஓரிரு நாட்களில் ருமேனியாவிலிருந்து டெல்லி வந்த விமானத்தில் தமிழகத்தின் 3 மாணவர்கள் தங்களது செல்ல நாய்களுடன் வந்திறங்கினர். கேரளா மற்றும் பெங்களூருவின் இரண்டு மாணவிகள் தாங்கள் அங்கு வளர்த்த பூனைகளுடன் வந்திருந்தனர்.
இவர்களில் ஒருவரான கார்கீவ் நகரின் வி.என்.கராஸினா தேசிய அரசு மருத்துவப் பல்கலைக்கழகத்தில் இறுதி ஆண்டு பயிலும் பிரிங்கி ஜோஸ் வினிதா, ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் கூறும்போது, ”இது, எனது ஹேப்பி எனும் பெண் குட்டி நாய். அலாஸ்கன் எனும் அமெரிக்க இன வளர்ப்பு நாய் இது. எங்களுக்கு முன் ஓசூரிலிருந்து வந்து படித்துச் சென்ற ஒரு மாணவர் இதே வகை, இனத்தின் செல்ல நாயுடன் நாடு திரும்பினார். இதை தமிழக காலநிலையில் வளர்ப்பதிலும் சிக்கல் இல்லை எனத் தெரிந்ததால் நானும் என் செல்லத்துடன் வந்துள்ளேன்” எனத் தெரிவித்தார்.
தனது செல்லத்தை வினிதா சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு ஓ.எல்.எக்ஸ் இணையம் மூலம் வாங்கியுள்ளார். அதற்கு முன்பாக அதன் குணநலன்களையும் யூடியூபில் பார்த்து ஆய்வு செய்துள்ளார் மாணவி வினிதா. இவர்போல், பலரும் உக்ரைனில் இணையதளம் வாயிலாக பார்த்து செல்லப் பிராணிகளையும் வாங்கி வளர்த்து வந்துள்ளனர். இதில் பலர் பயண சிரமத்திற்காக அவற்றை அங்கேயே விட வேண்டியதாயிற்று. தற்போது வந்த இந்த மூன்று மாணவர்களின் வளர்ப்பு நாய்களும் வயதில் சற்று பெரியவை. இதன் காரணமாக அவை விமானப் பயணித்தின்போது மற்றவர்களைக் கடித்து விடும் வாய்ப்புகள் உள்ளன. இந்த அச்சத்தால் அவர்களை வளர்ப்புப் பிராணிகளுடன் விமானத்தில் ஏற்ற அனுமதி மறுக்கப்பட்டுவிட்டது. இதனால், வேறுவழியின்றி இரண்டு தினங்களுக்காக அவர்கள் டெல்லியின் தமிழ்நாடு அரசு இல்லத்தில் தங்கி இருந்தனர். பிறகு நேற்று முன்தினம் மூவரும் டெல்லியிலிருந்து கிளம்பி ரயிலில் கிளம்பிச் சென்றனர்.
உக்ரைனில் தனது தாக்குதலை ரஷ்யா தொடங்கியவுடன் மனிதர்களுக்கே பாதுகாப்பு கேள்வியான நிலையில், தங்கள் செல்லப் பிராணிகளுடன் சேர்த்து தங்களையும் மாணவர்கள் காத்துக்கொண்டுள்ளனர்.
இதுவரை மீட்கப்பட்ட தமிழக மாணவர்கள்: உக்ரைனில் பயிலும் சுமார் 5,000 மாணவர்களில் இதுவரை சுமார் 1,200 மாணவர்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளனர். டெல்லி வரும் இவர்களை தொடக்கத்தில், சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற நகரங்களுக்கு ஒன்றாக அனுப்புவதில் சிக்கல் இருந்தது. இதற்கு பயண டிக்கெட்டுகள் கிடைக்காத நிலையும் இருந்தது. இதன் காரணமாக, உக்ரைனில் இருந்து பல்வேறு வகை சோர்வுடன் நாடு திரும்பி மாணவர்கள் விரைவாக வீடு திரும்ப முடியவில்லை.
இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி திருச்சி சிவா எம்.பி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு டெல்லியிலேயே வந்து அமர்ந்து தமிழக மாணவர்கள் மீட்புப் பணியை தீவிரப்படுத்தியுள்ளது. இவர்களது முயற்சியால் தமிழக மாணவர்களுக்கு என தனி விமானம் கடந்த இரண்டு நாட்களாக ஏற்பாடு செய்யப்பட்டன. இதில், நேற்று வரை சுமார் 360 மாணவர்கள் பிரச்சனையின்றி தங்கள் வீடுகளுக்கு திரும்பி இருந்தனர்.
இந்திய அளவில் உக்ரைனில் சுமார் 20,000 மாணவர்கள் பயில்கின்றனர். இவர்களில் ‘ஆப்ரேஷன் கங்கா’ எனும் பெயரில் மத்திய அரசால் இதுவரை சுமார் 18,000 பேர் தாயகம் அழைத்துவரப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை மார்ச் 10-ஆம் தேதி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்பாக அனைத்து இந்திய மாணவர்களும் தாயகம் திரும்பிவிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.