புதுடெல்லி: உக்ரைனின் சுமி நகரில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை பாதுகாப்பாக வெளியேற்ற தமது தரப்பில் அனைத்து உதவி நடவடிக்கைகளும் செய்து தரப்படும் என்று பிரதமர் மோடியிடம் ரஷ்ய அதிபர் புதின் உறுதியளித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொலைபேசியில் உரையாடினார். உக்ரைனில் உருவாகியிருக்கும் நிலைமை குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே நடைபெறும் பேச்சுவார்த்தையின் நிலைமை குறித்து பிரதமர் மோடியிடம் அதிபர் புதின் விவரித்தார். ரஷ்யா, உக்ரைன் இடையே நடைபெறும் பேச்சுவார்த்தையை வரவேற்ற பிரதமர் மோடி, போர் நிறுத்தத்திற்கு இவர்கள் தலைமை தாங்குவார்கள் என்ற நம்பிக்கையை வெளியிட்டார். ரஷ்ய அதிபர் புதின் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இடையேயான நேரடி உரையாடல் அமைதி முயற்சிகளுக்குப் பெரிதும் உதவும் என்று பிரதமர் மோடி யோசனை தெரிவித்தார்.
சுமியில் இன்னமும் இந்திய மாணவர்கள் இருப்பதை அடுத்து, அவர்களின் பாதுகாப்பு குறித்து பிரதமர் மோடி தமது ஆழ்ந்த கவலையை அதிபர் புதினிடம் தெரிவித்தார். அப்போது, இந்திய மாணவர்கள் உள்ளிட்ட குடிமக்களை வெளியேற்றுவதற்கு மனிதாபிமான அடிப்படையிலான வழித்தடங்களுக்கு உதவி செய்வது தொடர்பான நடவடிக்கைகளை பிரதமர் மோடியிடம் அதிபர் புதின் எடுத்துரைத்தார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெலன்ஸ்கியுடன் பேச்சு:
முன்னதாக, உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலன்ஸ்கியுடன் பிரதமர் மோடி இன்று (மார்ச் 07) காலை உரையாடினார். அப்போது, உக்ரைன் – ரஷ்யா இடையே நடைபெறும் பேச்சுவார்த்தை மற்றும் மோதல் நிலவரம் குறித்து பிரதமர் மோடியிடம் அதிபர் ஜெலன்ஸ்கி விரிவாக எடுத்துரைத்தார். தொடரும் மோதல் மற்றும் மனிதாபிமான பிரச்சினைக் குறித்து பிரதமர் மோடி தனது ஆழ்ந்த கவலையை அவரிடம் தெரிவித்தார். வன்முறை உடனடியாக முடிவுக்கு வர வேண்டும் என்பதை வலியுறுத்திய பிரதமர் மோடி, பிரச்சினைகளுக்கு அமைதி வழியில் தீர்வுக்காகவும், இரு தரப்பினரிடையே நேரடி பேச்சுவார்த்தைக்கும் இந்தியா எப்போதும் ஆதரவாக இருந்துள்ளது என்று குறிப்பிட்டார்.
உக்ரைனிலிருந்து 20,000-க்கும் அதிகமான இந்திய குடிமக்களை வெளியேற்றிக் கொண்டு வர வசதி செய்ததற்காக உக்ரைன் அதிகாரிகளுக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். இன்னமும் உக்ரைனில் இருக்கும் இந்திய மாணவர்களின் பாதுகாப்பு குறித்து ஆழ்ந்த வருத்தம் தெரிவித்த அவர், அவர்களை விரைவாகவும், பாதுகாப்பாகவும் வெளியே அழைத்து வருவதன் அவசியத்தை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் வலியுறுத்தியாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.