நெல்லை:
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு பெய்த வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்புப் பணிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (7.3.2022) ஆய்வு செய்து முடித்து, மதுரை விமான நிலையத்திற்கு சென்றார். அப்போது, உக்ரைனில் மருத்துவ பட்டப் படிப்பு படித்து வரும் நிவேதிதா, திவ்யபாரதி, ஹரிணி, நவநீத ஸ்ரீராம் ஆகியோர் திருநெல்வேலி மாவட்டம், ஜோதிபுரத்தில் முதல்வரை சந்தித்தனர். தங்களை உக்ரைனிலிருந்து பாதுகாப்பாக மீட்டு, தாயகம் திரும்பிட அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்ட தமிழ்நாடு அரசிற்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டார்கள்.
மேலும், உக்ரைனில் உள்ள தமிழ்நாட்டைச் சார்ந்த மாணவர்களை பாதுகாப்பாகத் தமிழகத்திற்கு திரும்பிட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருவதற்காகவும், தமிழ்நாட்டைச் சார்ந்த மாணவர்கள் உக்ரைனில் இருந்து தாய்நாடு திரும்புவதற்கு ஏற்படும் பயணச் செலவுகள் அனைத்தையும் தமிழ்நாடு அரசு ஏற்றதற்காகவும், போரால் பாதிக்கப்பட்டு தாயகம் திரும்பும் மருத்துவ மாணவர்கள் தங்கள் படிப்பை இந்தியாவில் தொடர உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தியமைக்காகவும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தங்களது நன்றியினை தெரிவித்தார்கள்.
இதற்காக முதலமைச்சரை நேரில் வந்து சென்னையில் சந்திக்க எண்ணியிருந்ததாகவும், முதலமைச்சரே தங்களை நேரில் சந்தித்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும் மாணவர்கள் தெரிவித்தார்கள்.
அப்போது முதலமைச்சர், இது அரசின் கடமை என்றும், மாணவர்களாகிய உங்களின் தேவைகளுக்காக எந்த நேரத்திலும் என்னை தொடர்பு கொள்ளலாம் என்றும், உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு தொடர்ந்து செய்து தரும் நம்பிக்கையுடன் இருங்கள் என்றும் கூறினார்.
இச்சந்திப்பின்போது, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் வி.விஷ்ணு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் கி. செந்தில்ராஜ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.