புதுடெல்லி: உக்ரைனில் இந்திய மாணவர்கள், தாய்நாடு திரும்ப ஜெர்மனி வாழ் தமிழர்கள் பல்வேறு வகைகளில் உதவி வருகின்றனர்.
ரஷ்யாவின் தாக்குதல் நடை பெறும் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை ‘ஆபரேஷன் கங்கா’என்ற பெயரில் மத்திய அரசு மீட்டு வருகிறது. அதற்காக உக்ரைனின் அண்டை நாடுகளாக உள்ள ருமேனியா, ஹங்கேரி, போலந்து மற்றும் லெவேஸ்கியா ஆகிய நாடுகளின் எல்லைகளுக்கு இந்தியர்கள் வரவேண்டி உள்ளது. அப்படி எல்லையில் உள்ள நாடு களுக்கு வரும் இந்தியர்கள், அங்கிருக்கும் இந்திய மீட்பு விமானங்களில் இந்தியா அழைத்து வரப்படுகின்றனர்.
ஆனால், ரஷ்ய எல்லையோரம் உள்ள உக்ரைனின் கிழக்குப் பகுதி களில் இந்தியர்கள் ஏராளமானோர் சிக்கியுள்ளனர். அங்கு தாக்குதல் தீவிரமடைந்ததால், சாலை போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. அதனால், மேற்குப் பகுதி எல்லையில் உள்ள நாடுகளை அடைவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன. இந்நிலையில், தமிழர்கள் உள்ளிட்ட பலருக்கும் ஜெர்மனி வாழ் தமிழர்கள் உதவி வருகின்றனர்.
இதற்காக, ஜெர்மனி வாழ் தமிழர்கள் மற்றும் தமிழ் அமைப்புகள் தனி ‘வாட்ஸ் அப்’ குழுக்களை அமைத்துள்ளனர். இவர்கள் ஜெர்மனியின் மியூனிக், பெர்லின், ஹம்பர்க், பிராங்க்பர்ட், ஸ்டுட்கார்ட் உள்ளிட்ட நகரங்களில் உள்ளனர். வாட்ஸ் அப் மூலம் கிடைக்கும் தகவல்களை வைத்து, உக்ரைனில் சிக்கியவர்களை தொடர்பு கொண்டு முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர்.
ஜெர்மனி வாழ் தமிழர்கள் உதவியுடன் டெல்லி வந்து சேர்ந்த திருப்பூர் மாணவர் நாகேந்திரன் முத்தையாலு சபரி, ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறும்போது, ‘‘வி.என்.கராசன் கார்கீவ் தேசியஅரசு மருத்துவப் பல்கலைக் கழகத்தில் எனது படிப்பு இன்னும் 3 மாதங்களில் முடிய உள்ளது. அங்கு கர்நாடக மாணவர் பலியானதில் ஏற்பட்ட பயத்தால் நான் உட்பட 21 தமிழர்கள் ஒரு மணி நேரத்தில் ரயிலில் கிளம்பி லிவீக்கு வந்தோம். அங்கிருந்து போலந்தில் இருந்த இந்திய மீட்பு விமானத்தை பிடிக்க முடியாமல் தவித்தோம். இதற்காக, எங் களுக்கு ஜெர்மனி தமிழர்கள் போனிலேயே வழிகாட்டி, இந்திய அதிகாரிகளுடனும் இணைத்து உதவியதை மறக்கவே முடியாது’’ என்று தெரிவித்தார்.
மேலும் உக்ரைன் நாட்டினரை ஜெர்மனி அரசு அகதிகளாக வரவேற்கிறது. போரில் சிக்கிய வெளிநாட்டு மாணவர்கள், தம்நாடு வழியாக வந்து வீடுகளுக்கு திரும்ப ஜெர்மனி அரசுஅனுமதிக்கிறது. இந்திய மாணவர்கள் தாய்நாடு திரும்ப 3 மாத தற்காலிக விசாவும் அளிப்பதாக அறிவித்துள்ளது. இதை ஏற்று 2 நாட்களுக்கு முன்னர் போலந்தின் எல்லைக்கு மிக அருகில் உள்ள ஜெர்மனியின் பெர்லினுக்கு தமிழர்கள் உள்ளிட்ட தலா 18 இந்திய மாணவர்கள் கொண்ட 3 குழுக்கள்வந்தன. அவர்களை பெர்லின் தமிழ்ச் சங்கத்தினர் வரவேற்று தங்க வைத்து உதவி வருகின்றனர்.
இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் ஐரோப்பியக் கூட்ட மைப்பின் முக்கிய நிர்வாகியும் மூன்சென் நகரத் தமிழ்ச் சங்கத்தின் தலைவருமான பி.செல்வகுமார் கூறும்போது, ‘‘எல்லை நாடுகளில் உள்ள மீட்பு விமானங்களை பிடிக்க முடியாமல் தவிப்பவர்களுக்கு ஜெர்மனியில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் மூலம் இந்திய மீட்பு குழுவினைரை தொடர்பு கொள்ள வைக்கிறோம். ஜெர்மனியின் செஞ்சிலுவை சங்கத்தினர் மூலமும் உக்ரைன் இந்திய மாணவர்களுக்கு பேருந்துபோக்குவரத்து அளிக்க உதவ முடிகிறது’’ என்றார்.
இந்திய மாணவர்கள் தாய்நாடு திரும்ப 3 மாத தற்காலிக விசாவும் அளிப்பதாக ஜெர்மனி அறிவித்துள்ளது.