புதுடெல்லி: உக்ரைனில் நடைபெறும் போரைத் தொடர்ந்து அதன் அண்டை நாடுகளில் இருந்து இதுவரை 15,900க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்கப்பட்டு தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:
‘ஆபரேஷன் கங்கா’ திட்டத்தின் கீழ், 11-க்கும் மேற்பட்ட சிறப்பு விமானங்கள் மூலம், 2,135 இந்தியர்கள், யுக்ரைனின் அண்டை நாடுகளில் இருந்து நேற்று அழைத்து வரப்பட்டனர்.
இத்துடன், 15,900 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் கடந்த பிப்ரவரி 22ம் தேதி முதல் சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியா அழைத்து வரப்பட்டனர். இதுவரை மொத்தம் 66 சிறப்பு விமானங்கள் மூலம் அழைத்து வரப்பட்ட இந்தியர்களின் எண்ணிக்கை 13,852-ஐ எட்டியுள்ளது. விமானப்படையின் ஜம்போ விமானங்கள், 10 முறை சென்று 2056 பேரை அழைத்து வந்துள்ளது. இந்த பயணத்தில், 26 டன் நிவாரணப் பொருட்களையும் இந்தியா கொண்டு சென்றது.
இந்த சிறப்பு விமானங்களில் நேற்று 9 புதுடெல்லியிலும், 2 மும்பையிலும் தரையிறங்கியது. புடாபெஸ்ட் நகரத்திலிருந்து 6 விமானங்களும், புகாரெஸ்ட் நகரிலிருந்து 2 விமானங்களும், ரெசஸ்சோ நகரில் இருந்து 2 விமானங்களும், கோசிஸ் நகரில் இருந்து ஒரு விமானமும் வந்தன.
இன்று 8 சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு 1,500 இந்தியர்கள் அழைத்து வரப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.