போர் வெடித்து, பலர் உயிர்விட்டுக்கொண்டிருக்கும் நிலையிலும், எப்படித்தான் சிலரால் இனவெறுப்புக் காட்டமுடிகிறதோ தெரியவில்லை.
உக்ரைனில் போர் வெடித்துள்ள நிலையில், அங்கிருந்து எப்படியாவது வெளியேறிவிடலாம் எனத் துடிக்கும் மக்களையும், மனிதாபிமானமின்றி இனவெறுப்புக் காட்டி அவமதிக்கும், பாரபட்சம் காட்டும் சம்பவங்கள் தொடர்வதாக, தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்தவண்ணம் உள்ளன.
கருப்பினத்தவர்கள் முதல் மத்திய கிழக்கு நாட்டவர்கள் வரை பலரும் உக்ரைனை விட்டு வெளியேற முயற்சிக்கும் நிலையில், தாங்கள் இன வெறுப்புக்கும் பாரபட்சத்துக்கும் உள்ளானதாக கடும் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளாலார்கள்.
அவ்வகையில், நைஜீரியாவைச் சேர்ந்த சில மாணவர் ஒருவர் உக்ரைனை விட்டு வெளியேற முயற்சிக்கும் நிலையில், தானும் தன்னுடன் வந்தவர்களும் சந்தித்த இனவெறுப்பைக் குறித்து வேதனையுடன் விளக்கியுள்ளார்.
Alexander Somto Orah (25) என்னும் அந்த மாணவர் முதல், நூற்றுக்கணக்கானோர், போர் துவங்கியதை அறிந்ததும், கடந்த மாதம் 25ஆம் திகதி உக்ரைனை விட்டு வெளியேறும் முயற்சியைத் துவங்கியுள்ளார்கள்.
நான்கு நாட்கள் கால்கடுக்க நடந்து, 590 மைல்கள் கடந்து எல்லையை நெருங்கிய நிலையில், அங்கு நின்ற எல்லை பாதுகாப்புப் படை வீரர்களோ, அவர்களை எல்லைக்கருகிலேயே விட மறுத்திருக்கிறார்கள்.
எப்படியாவது எல்லையைக் கடந்துவிடவேண்டும் என இந்த மக்கள் முன்னேற முயற்சிக்க, எல்லைக் காவலர்கள் பொலிசாரை அழைத்திருக்கிறார்கள். வந்த பொலிசாரோ துப்பாக்கியைக் காட்டி மிரட்ட, நாங்கள் குற்றவாளிகள் அல்ல, சட்டவிரோதமாகவும் நாங்கள் உங்கள் நாட்டுக்குள் வாழவில்லை என்றும் சத்தமிட்டுள்ளார்கள் இவர்கள்.
இரவெல்லாம் குளிரிலேயே காத்துக் கிடக்க, மறு நாள் காலை எல்லோரையும் வரிசையில் நிற்கச் சொல்லியிருக்கிறார்கள் எல்லைக் காவலர்கள்.
சுமார் 12 மணியளவில் அவர்களிடம் வந்த ஒரு காவலர், இந்தியர்களும், ஆப்பிரிக்கர்களும், மத்திய கிழக்கு நாட்டவர்களும் வேறிடத்துக்குச் செல்லுங்கள், உங்களை இந்த எல்லை வழியாக அனுமதிக்க முடியாது என்று கூறியுள்ளார்.
அவர்களிடம் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், அவர்கள் இவர்களை விட மறுக்க, மீண்டும் நான்கு நாட்கள் நடந்தே வேறொரு இடத்துக்குச் சென்று, அங்கிருந்து போலந்துக்குள் நுழைந்திருக்கிறார்கள் அனைவரும்.
ரயிலில் ஏற முயன்ற தங்களைத் தடுத்து, பெண்களுக்கும் குழந்தைகளுக்கும்தான் ரயிலில் இடம் என்று சொல்ல, Alexanderம் மற்ற ஆண்களும் சரி என்று கூறி பின்வாங்கியிருக்கிறார்கள்.
ஆனால், தங்களை மட்டுமல்ல, ஆப்பிரிக்கப் பெண்களையும், கர்ப்பமாக இருந்த, மற்றும் குழந்தைகளுடன் இருந்த மத்திய கிழக்கு நாட்டுப் பெண்களையும் அவர்கள் ரயிலில் ஏறவிடவில்லை என்பதை அறிந்த Alexander, அப்போதுதான் இனவெறுப்புக் காட்டப்படுவதை உணர்ந்துள்ளார்.
தொடர்ந்து பலர் இவ்வித குற்றச்சாட்டுகளை தெரிவித்தவண்ணம் இருக்க, தாங்கள் இனவெறுப்போ, பாரபட்சமோ காட்டவில்லை என உக்ரைன் அதிகாரிகள் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.