லண்டன்: உக்ரைனில் மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளைக் குறிவைத்து ரஷ்ய ராணுவம் தாக்கி வருவதாக பிரிட்டன் ராணுவ உளவுத்துறை தெரிவித்துள்ளது. அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. கடந்த 10 நாட்களுக்கு மேலாக உக்ரைன் மீது ரஷ்யா கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் பலர் இறந்துள்ளனர். எனினும், உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகிறது. இது ரஷ்ய படையினர் முன்னேறுவதை தாமதப்படுத்துகிறது. உக்ரைனின் இந்த எதிர் தாக்குதலை ரஷ்யா எதிர்பார்க்கவில்லை. இந்நிலையில், உக்ரைனில் மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தி வருவதாக பிரிட்டன் ராணுவ உளவுத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இங்கிலாந்து உளவுத்துறை அதிகாரிகள் கூறியதாவது: உக்ரைனில் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளை குறிவைத்து ரஷ்யா தாக்குதல் நடத்துகிறது. ரஷ்யாவுக்கு உக்ரைன் கடும் பதிலடி கொடுத்து வருகிறது. உக்ரைனின் எதிர்ப்பின் அளவும் வலிமையில் ரஷ்யாவை வியப்படைய வைத்துள்ளது. உக்ரைனின் எதிர்ப்பால் ரஷ்ய ராணுவம் உக்ரைனில் முன்னேறுவது தாமதமாகிறது. இதனால், உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தி உள்ளது.
உக்ரைனின் கார்கிவ், செர்னிஹிவ், மரியுபோல் ஆகிய இடங்களில் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளை குறிவைத்து ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு முன்பு 1999-ம் ஆண்டில் செசன்யாவிலும் 2016-ம் ஆண்டில் சிரியாவிலும் இதேபோன்ற தந்திரத்தை ரஷ்யா பயன்படுத்தியது. அப்போதும், மக்கள் வசிக்கும் பகுதிகளை குறிவைத்து தரையிலும் வான் மூலமும் ரஷ்யா தாக்குதல் நடத்தியது. இப்போது உக்ரைனிலும் அதே
போன்று தாக்குதலை நடத்தி வருகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளில் தாக்குதல் நடத்தவில்லை என்று ரஷ்ய ராணுவம் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது.