உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. ராணுவ இலக்குகள், அரசின் சொத்துகளை தாக்கி அழிப்பதே இலக்கு என முதலில் தெரிவித்த ரஷ்யா, தற்போது உக்ரைன் நாட்டின் நகரங்களை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் மீதான போரை ரஷ்யா கைவிட வேண்டும் என்று உலக நாடுகள் வேண்டுகோள் விடுத்து வருகின்றன. இது தொடர்பாக இரு தரப்புக்கும் இடையே இரண்டு கட்ட பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று முடிந்துள்ளன. ஆனாலும், ஆக்கப்பூர்வ முடிவுகள் இதுவரை எடுக்கப்படவில்லை.
அதேசமயம், ரஷ்யா போரை கைவிட உலக நாடுகள் உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள உக்ரைன் அதிபர்
வோலோடிமிர் ஜெலென்ஸ்கி
இந்தியா உள்ளிட்ட நட்பு நாடுகள் ரஷ்யாவுடன் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். உக்ரைன் – ரஷ்யா விவகாரத்தில் இந்தியா நடுநிலை வகிக்கும்; அமைதியையே இந்தியா விரும்புகிறது என மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
ஆனாலும், உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு ஆதரவாக இந்தியா செயல்படுவதாக கூறி, அந்நாட்டில் இருந்து வெளியேறும் இந்திய மாணவர்களிடம் உக்ரைன் ராணுவத்தினர் கடினப் போக்குடன் நடந்து கொள்வதாக சில வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில்,
உக்ரைன் அதிபர்
வோலோடிமிர் ஜெலென்ஸ்கி உடன்
பிரதமர் மோடி
தொலைபேசியில் பேசவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்போது, போர் விவகாரம், உக்ரைனில் இருந்து இந்தியர்கள் வெளியேறுவது உள்ளிட்டவை குறித்து பிரதமர் மோடி பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, ரஷ்ய அதிபருடன் பிரதமர் மோடி ஏற்கனவே இரண்டு முறை தொலைபேசியுள்ளார். அதன் தொடர்ச்சியாக, உக்ரைன் அதிபருடன் பிரதமர் மோடி பேசவுள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்ய படைகள் 12ஆவது நாளாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பிரதமர் மோடியின் இந்த பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. உக்ரைனில் சிக்க்கியிருக்கும் சுமார் 20,000 இந்தியர்களை ஆப்ரேஷன் கங்கா என்ற பெயரில் அண்டை நாடுகளின் உதவியுடன் மீட்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதனை பிரதமர் மோடி நேரடியாக பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.