புதுடில்லி: உக்ரைன் மீது ரஷ்யா போர் நடத்திவரும் சூழலில், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் செலன்ஸ்கி உடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து போர் தொடுத்து வருகிறது. உக்ரைனின் சில நகரங்களில் ரஷ்யாவின் தாக்குதலால், பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது. ரஷ்யா போரை கைவிட உலக நாடுகள் உதவ வேண்டும் என்று உக்ரைன் அதிபர் வோலோடிமிர் செலன்ஸ்கி கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், இந்தியா உள்ளிட்ட நட்பு நாடுகள் ரஷ்யாவுடன் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இந்த நிலையில், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் செலன்ஸ்கி உடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். சுமார் 35 நிமிடங்கள் தொடர்ந்த இந்த பேச்சில், உக்ரைனில் நிலவிவரும் சூழல் குறித்து இரு நாட்டு தலைவர்களும் விவாதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், உக்ரைனில் இருந்து இந்தியர்களை வெளியேற்ற உதவிய உக்ரைன் அரசுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார். சுமி நகரில் உள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையில் தொடர்ந்து உதவிடவும் பிரதமர் மோடி கோரிக்கை விடுத்துள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் அதிபருடன் பேச்சுவார்த்தை முடிவடைந்த நிலையில், ரஷ்ய அதிபர் புடின் உடனும் பிரதமர் மோடி பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 12வது நாளாக போர் தொடர்ந்து வரும் நிலையில், இருநாட்டு தலைவர்களுடனும் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துவது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
Advertisement