உளுந்தூர்பேட்டை: மாசி மாத தேரோட்ட திருவிழாவில் சாய்ந்த தேர்… பக்தர்கள் அதிர்ச்சி

உளுந்தூர்பேட்டை அருகே நடைபெற்ற மாசி மாத தேரோட்ட திருவிழாவின்போது தேர் சாய்ந்து கவிழ்ந்த சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எலவனாசூர்கோட்டையில் அருள்மிகு பெரியநாயகி என்கிற அங்காளம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் மயான கொள்ளை திருவிழா நடப்பது வழக்கம். திருவிழாவை தொடர்ந்து மாசி தேரோட்டமும் நடைபெறும். இந்த ஆண்டு திருவிழா கடந்த மார்ச் இரண்டாம் தேதி வெகு விமரிசையாக நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, இன்று திருத்தேரோட்டம் நடைபெற்றது.
இதற்காக எலவனாசூர்கோட்டை, உளுந்தூர்பேட்டை, அலங்கிரி, வீரமங்கலம், செம்பியன்மாதேவி, புகைப்பட்டி, வெள்ளையூர் உட்பட சுமார் 50க்கும் மேற்பட்ட ஊர்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர் இடத்துக்கு சென்றிருந்தனர். காலை 10:30 மணிக்கு திருத்தேரில் அம்மன் சிலை வைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்ட பின்பு சிறப்பு பூஜையும் தீபாராதனையும் நடைபெற்றது.
image
இதனை தொடர்ந்து பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சக்தி முழக்கமிட்டனர். பக்தர்களின் முழக்கத்தோடு திருத்தேர் புறப்பட்டு பூசாரி தெரு கடைவீதி சிவன் கோவில் தெரு – சேலம் ஆரம்ப சுகாதார நிலையம் சாலை ஆகியவற்றின் வழியாக வந்து மேலப்பாளையம் சாலைக்கு செல்லும் பொழுது திடீரென சாரல் மழை பெய்தது.
இந்நிலையில் தேர் வழுக்கி அந்தத் தெருவில் சாய்ந்து கீழே விழுந்தது. இதில் தேரில் இருந்த பூசாரி சுந்தரம் என்பவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். தேர் விழுந்ததால் அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் உடனடியாக ஜேசிபி இயந்திரத்தை வரவழைத்தனர். பின் பக்தர்கள் உதவியோடு அந்த தேர் மீண்டும் தூக்கி சீர்செய்யப்பட்டு கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது.
தேரோட்டத்தின்போது திருத்தேர் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் பற்றி தகவல் அறிந்த வருவாய்த்துறை அதிகாரிகள் காவல்துறையினர் மற்றும் இந்து அறநிலை துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்திய செய்தி: விசா, மாஸ்டர் கார்டு சேவை நிறுத்தம்: நெருக்கும் சேவை அமைப்புகள்..சீனா பக்கம் சாயும் ரஷ்யாSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.