தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் திமுக பெரும்பான்மை வெற்றி பெற்றுள்ள நிலையில், உள்ளாட்சியில் சிறு தவறு நடந்தாலும், நடவடிக்கை எடுப்பது உறுதி என்று முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தூத்தக்குடியில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் பேசுகையில்,
தமிழக உள்ளாட்சி தேர்தலில். இதுவரை கழகம் கண்டிராத சிறப்பான வெற்றியை பெற்றுள்ளோம். அந்த வெற்றியை பெற்ற பிறகு என்னுடைய முதல் சுற்றுப்பயணம் இது. உள்ளாட்சியிலே இன்று மேயர்களாக, துணை மேயர்களாக மாநகராட்சி உறுப்பினர்களாக, பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவர்களாக, பேரூராட்சியில் உறுப்பினர்களாக அதேபோல் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பொறுப்பேற்றுள்ளவர்கள் மட்டுமல்ல சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தாலும் சரி நாடாளுமன்ற் உறுப்பினர்களாக இருந்தாலும் சரி, அமைச்சர்கள் மற்றும் முதல் அமைச்சராக இருக்கும் நானாக இருந்தாலும் சரி, மக்களோடு மக்களாக பணியாற்று என்ற அண்ணாவின் சொல்லை உணர்ந்து, நாம் நம்முடைய கடமையை ஆற்ற உறுதி எடுத்தக்கொள்ள வேண்டும்.
1996-ம் ஆண்டு சென்னை மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்று நான் மேயராக பதவியேற்றபோது, மக்கள் உனக்கு தந்தது பதவி அல்ல பொறுப்பு அதை உணர்ந்து பணியாற்று என்று கலைஞர் என்னிடம் சொன்னார். அதைத்தான் இன்றைக்கு பொறுப்பேற்றுக்கொண்டிருக்கும் அனைவருக்கும் நினைவுபடுத்துகிறேன். உறுதியோடு சொல்கிறேன் எங்காவது சிறு தவறு நடந்தாலும் அதை நான் தொடர்ந்து கண்கானித்துக்கொண்டிருப்பேன். அதுமட்டுமல்லாமல் உரிய நடவடிக்கை உடனடியாக எடுப்பேன் என்பதை உறுதியோடு சொல்லிக்கொள்கிறேன்.
தூத்துக்குடியில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலைத் திறப்பு https://t.co/hVKKjyEDdn
— M.K.Stalin (@mkstalin) March 6, 2022
மிரட்டுவதற்காகவே அல்லது அச்சுறுத்துவதற்காகவே அல்ல மக்கள் நம்மை நம்பி பொறுப்பை ஒப்படைத்திருக்கிறார்கள். அந்த பொறுப்பை நாம் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக நம்முடைய கூட்டணி கட்சிகளுக்க சில இடங்களை ஒதுக்கி அவர்களிடத்திலே ஒப்படைத்தோம். ஆனால் அங்கு ஒரு சில இடங்களில் தவறுகள் நடந்தது. அந்த தவறை செய்தவர்கள் உடனடியாக திருந்தி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இல்லை என்றால் கட்சி உரிய நடவடிக்கை எடுக்கும் என்பதை உறுதி. ஆகவே உள்ளாட்சியில் பொறுப்பேற்றுள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள் சொல்லி உங்களது பொறுப்பை உணர்ந்து பணியாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“