என்னை பார்ப்பது இதுவே கடைசியாக இருக்கலாம்: நான் செத்தாலும் ஆட்சி தொடர்ந்து நடக்கும்- உக்ரைன் அதிபர் உருக்கம்

கீவ்:

உக்ரைன் அதிபர்
ஜெலன்ஸ்கி தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். போர் நிலவரம் மற்றும் எதிர்கால சூழ்நிலை பற்றி அவர் உருக்கமாக பல்வேறு தகவல்களை வெளியிட்டார்.

உக்ரைன் வான்பரப்பை விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கவேண்டும் என தொடர்ந்து நான் வலியுறுத்தி வருகிறேன். அப்படி அறிவித்தால் உக்ரைன் மீது பறந்து வரும் ரஷிய விமானங்களை மற்ற நாட்டு போர் விமானங்களால் சுட்டு வீழ்த்த முடியும்.

ஆனால் நேட்டோ நாடுகளும், அமெரிக்காவும் எனது கோரிக்கையை ஏற்க தயங்குகின்றன. இதனால் உக்ரைன் மக்கள் அடுத்தடுத்து பாதிப்புகளை சந்தித்து வருகிறார்கள். அடுத்து என்ன நடக்கும் என்பது உறுதியாக தெரியவில்லை.

ரஷியபடைகள் எங்களின் முக்கிய நகரங்களை முற்றுகையிட்டுள்ளன. குடியிருப்பு பகுதிகளில் அதிகமாக குண்டுகளை போடுகிறார்கள். இதனால் மக்கள் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனது உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டு இருக்கிறது. இதுவே நீங்கள் என்னை பார்க்கும் கடைசி தருணமாகக் கூட இருக்கலாம். உலக நாடுகள் இந்த போரை இனியும் வேடிக்கை பார்க்கக் கூடாது. எங்களுக்கு உதவ முன்வரவேண்டும். எங்களுக்கு தேவையான ஆயுதங்களை தாருங்கள்.

ஐரோப்பிய நாடுகள் ஒருங்கிணைந்து எங்களுக்கு அதிக போர்விமானங்களை வழங்க வேண்டும். அப்படி கொடுத்தால்தான் உக்ரைன் தன்னை பாதுகாத்துக் கொள்ள முடியும். இந்த வி‌ஷயத்தில் ஐரோப்பிய நாடுகள் நல்ல முடிவை எடுக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.

என்னை படுகொலை செய்வதற்கு ரஷிய அதிபர் புதின் சிறப்பு படைகளை அனுப்பி உள்ளார். நூற்றுக்கணக்கான ரஷிய உளவுப்படைகள் கீவ் நகரில் உள்ளன. அவர்கள் என்னை குறி வைத்து நகர்ந்து வருகிறார்கள்.

எந்த நேரத்திலும் நான் படுகொலை செய்யப்படலாம். இதை எல்லாம் நான் ஏற்கனவே நன்கு உணர்ந்துள்ளேன். எனவே உக்ரைன் நாட்டு நலனுக்காக மாற்றுத்திட்டங்களை ஏற்கனவே தயார் செய்து வைத்துவிட்டேன்.

நான் கொல்லப்பட்டாலும் உக்ரைனில் இந்த ஆட்சி தொடர்ந்து நடைபெறும். அதை யாராலும் முடக்க முடியாது. எனக்கு பிறகும் உக்ரைன் நாட்டை பாதுகாத்துக் கொள்ள மக்கள் துணிந்து போராடுவார்கள்.

இதற்காக வெளிநாடுகளில் உள்ள உக்ரைன் மக்கள் வந்து கொண்டு இருக்கிறார்கள். எங்கள் மண்ணை நாங்கள் விட்டுக் கொடுக்க மாட்டோம். ஒரு போதும் பின்வாங்கும் பேச்சுக்கே இடம் இல்லை.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.