சுருள் முடி, விரிந்த கண்கள், மிரட்டும் மொழி, கைகளைப் பிசைந்தபடி திரையில் வில்லத்தனமாகத் தோன்றும் நம்பியாரின் இன்னொரு முகம் மிக நிதனமானது. சுற்றியிருப்பவர்களை எப்போதும் சிரிக்க வைத்துக்கொண்டே இருப்பவர். நம்பியாரைப் பற்றி அவரது மனைவி ருக்மணி அம்மாள் அளித்துள்ள பேட்டியில் அறிய கிடைக்கும் நம்பியார் திரைக்கு சிறிதும் தொடர்பில்லாதவராக இருக்கிறார். 27.07.1969 தேதியிட்ட விகடன் இதழில் வெளிவந்திருக்கும் பேட்டியிலிருந்து சில பகுதிகள்…
“படப்பிடிப்புக்கு போய்ட்டு வந்ததும் நம்பியார் எப்படி இருப்பார்?”
“ரொம்ப ப்ரீயா இருப்பார். படப்பிடிப்பிலே என்னென்ன நடந்தது. யார் யார்கிட்டே என்னென்ன பேசினார்ங்கிறதை ஒன்னுவிடாம சொல்வார். என்கிட்டே மட்டுமல்ல. யார்கிட்டயும் எதையும் மறைக்காமல் சொல்வார். எனக்கு கொஞ்சம் கோபம் வர்றதுண்டு. யாரையாவது கொஞ்சம் கோபமா கண்டிச்சேன்னா அவங்களுக்கு எதிரிலேயே என்னிடம் ‘கோபப்படாமல் நிதானமாகப் பேசு’ன்னு சொல்வாரு.”
“தொழில் விஷயத்திலே நீங்கள் அவருக்கு ஏதாவது யோசனை சொல்வதுண்டா”
“கிடையாது. அதிகாலையிலே ஷூட்டிங் போகணும்னா அவராகவே எழுந்துப்பார். மற்ற நாட்களில் நான் அவரை எழுப்பிவிடுவேன். கண்ணை முழிச்சதும் ரேடியோவை போடச் சொல்வார். அதைக் கேட்டுக்கிட்டே கொஞ்ச நேரம் தூங்குவார். அதென்னமோ ரேடியோ சத்தம் இருந்தாதான் அவருக்கு நல்லா தூக்கம் வருது”
“பொதுவா எத்தனை மணிக்குத் தூங்குவார்”
“அவராலே எப்பவும் தூங்க முடியுங்க. காரணம், கவலையே இல்லாத மனசு.நாமும் சந்தோசமா இருக்கணும். நம்மோட இருக்கிற மற்றவங்களும் சந்தோசமா இருக்கணும்னு நினைப்பார். இவ்வளவு நல்லவருக்கு எப்போதும் வில்லன் வேஷமே தர்றாங்களேன்னு நான் கவலைப்படுறதும் உண்டு. ஆனா, அந்தக் கவலைகூட அவருக்கு கிடையாது. ‘வேஷம்… அது எதுவானாத்தான் என்ன?’ங்கிறது தான் அவருடைய நினைப்பு”
“வருஷா வருஷம் சபரிமலைக்குப் போகிறாரே… இங்கே கோயிலுக்குப் போவதுண்டா”
“இல்லீங்க வீட்டிலே பூஜை அறை இருக்கு. நான் பூஜை செய்து கொண்டிருக்கும் போது அவர் வந்து கொஞ்ச நேரம் சாமி கும்பிட்டுவிட்டுப் போவார். எனக்கு பயம்…’எங்கே இவர் பூஜை அறையில் கூட தமாஷ் பண்ணுவாரோ’ என்று.”
“உங்க கணவர் சிகரெட் குடிக்கிறாரே அதற்கு நீங்கள் எதுவும் ஆட்சேபனை சொன்னதில்லையா”
“இல்லீங்க வருசத்துக்கு ரெண்டு மாசம் தான் சிகரெட் குடிப்பார், மீதி மாசங்களிலே குடிக்க மாட்டார். என்னவோ அப்படி ஒரு பழக்கம்”
“நாடக ஒத்திகை பார்க்கிற மாதிரி சினிமா ரோல்களை வீட்டிலே ஒத்திகை பார்ப்பாரா?”
“வீட்டில இருக்கிற மட்டும் அவருக்கு இந்த வீடு தான் எல்லாம். மாடியிலே உட்கார்ந்து பேப்பர் படிப்பார்; ரேடியோ கேட்பார்; சமையல் கட்டுக்கு வருவார்; அங்கேயும் இங்கேயும் மெதுவா நடைபோடுவார்; இடையிலே எதையாவது பேசி சிரிக்க வைப்பாரு. இவர் வீட்டில் இருந்தால் போதும். எனக்கு சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணாயிடும்”