புதுடில்லி : ”மலிவு விலையில் மருந்துகள் வழங்கும் திட்டத்தால், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயனடைந்துள்ளனர்,” என, பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் தெரிவித்தார்.
குறைந்த விலையில் தரமான மருந்துகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், மலிவு விலையில் மருந்துகள் தரும் திட்டம், மத்திய அரசால் துவக்கப்பட்டது. இத்திட்டத்தின் பயனாளிகளுடன், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக, பிரதமர் நரேந்திர மோடி நேற்று கலந்துரையாடினார்.
அவர் கூறியதாவது:மருந்து விலைகள் மீது மக்களுக்கு இருந்த அச்சம், இத்திட்டத்தால் குறைந்துவிட்டது. இந்த திட்டத்தின்கீழ், நாடு முழுதும் 8,500 சிறப்பு மருந்தகங்கள் இயங்கி வருகின்றன.இவை ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்களுக்கு மிகவும் பயன் தருகின்றன. இத்திட்டத்தின் வாயிலாக மக்கள், 13 ஆயிரம் கோடி ரூபாயை சேமித்துள்ளனர்.
புற்றுநோய், காசநோய், நீரிழிவு மற்றும் இருதய நோய்களின் சிகிச்சைக்கு தேவையான, 800க்கும் மேற்பட்ட மருந்துகளின் விலைகளை மத்திய அரசு ஒழுங்குபடுத்தி உள்ளது.இதேபோல், ‘ஸ்டென்ட்’ எனப்படும், ரத்தக் குழாயில் பொருத்தப்படும் ஒரு வகை உலோக குழாய், மூட்டு எலும்பு அறுவை சிகிச்சையில் பொருத்தப்படும் கருவி ஆகியவற்றின் விலைகளும் குறைக்கப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement