பெங்களூரு: மேகதாது அணை விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரின் போதே அனைத்துக் கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாகவும், அதன் பின்னர் டெல்லி சென்று நீர்வளத்துறை அமைச்சரை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக கடநாடக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக 9 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரிவான வரைவு திட்ட அறிக்கையை தயாரித்து ஒன்றிய நீர்வளத்துறைக்கு கர்நாடக அரசு அனுப்பி வைத்துள்ளது. மேகதாதுவில் அணை காட்டும் திட்டத்திற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் பெங்களுருவில் இரு தினங்களுக்கு முன்பு நடந்த தென் மாநில மாநாட்டில் கலந்துகொண்ட ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் மேகதாதுவில் அணை கட்டும் விவகாரத்தில் கர்நாடகம்- தமிழ்நாடு அரசுகள் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்றும், இந்த பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகளை செய்ய ஒன்றிய அரசு தயாராக இருப்பதாகவும் கூறியிருந்தார். இதற்கு கர்நாடக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய பசவராஜ் பொம்மை; மேகதாது அணை விவகாரம் தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்த உள்ளதாக கூறினார். அதன் பிறகு டெல்லி சென்று மேகதாது, கிருஷ்ணா உள்ளிட்ட நீர்ப்பாசன திட்டங்கள் குறித்து ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் கூறினார்.