ஒரு வேளை.. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கொல்லப்பட்டால்?.. அமெரிக்கா பரபர தகவல்

ரஷ்யத் தாக்குதலில் என்ன நடந்தாலும் அதை சமாளிக்கும் வகையிலான திட்டங்களுடன் உக்ரைன் தயார் நிலையில் இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.

ஒரு வேளை உக்ரைன் அதிபர் விலாடிமிர் ஜெலன்ஸ்கி இந்த போரில் கொல்லப்பட்டாலும் கூட அதற்கும் மாற்றுத் திட்டங்களை உக்ரைன் வைத்துள்ளதாகவும் பிளிங்கன் கூறியுள்ளார்.

உக்ரைன் தலைநகர் கீவ், 2வது பெரிய நகரமான கார்கிவ் மற்றும் பல்வேறு முக்கிய நகரங்களை சுற்றி வளைத்துள்ளது ரஷ்யா. அடுத்து உள்ளே புகுந்து தாக்குதல் நடத்த அது தயாராகி வருகிறது. ஆனால் உள்ளே நுழைய முடியாதபடி உக்ரைனியப் படைகள் கடும் எதிர்த் தாக்குதல் நடத்துவதால் ரஷ்யாவின் முன்னேற்றம் தாமதமாகியுள்ளது.

இந்த நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் உயிருக்கு ஆபத்து ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா கொலை வெறியுடன் உள்ளது. எல்லாவற்றுக்கும் காரணம் ஜெலன்ஸ்கிதான் என்பது ரஷ்யாவின் கோபமாகும். எனவே ஜெலன்ஸ்கியை உயிருடன் அது விடுமா என்ற சந்தேகமும் உள்ளது.

இந்தப் பின்னணியில் இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் பிளிங்கன் விளக்கியுள்ளார். அவரிடம் இதுகுறித்து டிவி நிகழ்ச்சி ஒன்றில் செய்தியாளர் கேட்டபோது, உக்ரைனியர்கள் அனைத்து வகையான திட்டங்களுடன் தயார் நிலையில் உள்ளனர். அரசு தொடர்ந்து நடப்பதை உறுதி செய்யும் வகையிலான திட்டங்கள் தயார் நிலையில் உள்ளது. உக்ரைன் அதிபரின் உயிருக்கு ஆபத்து நேரிட்டாலும் கூட அதைச் சமாளிக்கும் வகையில் உக்ரைன் தயார் நிலையில் உள்ளது.

தலைக்கு 300 டாலர்.. கூலிப்படையை களம் இறக்கும் ரஷ்யா.. அதிர வைக்கும் “ஷாக்” திட்டம்!

உக்ரைனில் நான் ஓரிரு நாட்கள் தங்கியிருந்தேன். அப்போது அந்த நாட்டு வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபாவுடன் பேசினேன். அவர் என்ன மாதிரியான சூழல் ஏற்பட்டாலும் அதை சமாளிக்கும் வகையில் தாங்கள் தயாராக இருப்பதாக தெரிவித்தார். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவரது அரசும் திறம்பட செயலாற்றி வருகிறது. உக்ரைன் மக்களின் தைரியத்துக்கு இவர்கள்தான் சிறந்த உதாரணம் என்றார் அவர்.

ஜெலன்ஸ்கியைக் கொல்ல ரஷ்யா ஏற்கனவே முயற்சித்துள்ளது. 3 முறை அவர் ரஷ்ய கொலை முயற்சியிலிருந்து ஏற்கனவே தப்பியுள்ளார். உக்ரைன் உளவுத்துறை மிகவும் வலுவாக இருப்பதால் இந்த கொலை முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. அபாயகரமான வாக்னர் கும்பல் மற்றும் செச்சன் போராளிகளை வைத்து ஜெலன்ஸ்கியைக் கொல்ல ரஷ்யா முயற்சித்தது. ஆனால் அது தோல்வியடைந்தது.

இப்படிப்பட்ட நிலையில்தான் ஜெலன்ஸ்கி உயிருக்கே ஆபத்து ஏற்பட்டாலும் உக்ரைன் நிலைகுலைந்து போகாது. மாற்றுத் திட்டங்களுடன் அது தயார் நிலையில் இருக்கிறது என்று அமெரிக்கா கூறியுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.