மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு, டிசம்பர் 5-ம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். அவர் மரணத்தில் மர்மம் இருப்பதாக பலரும் கூறியதை அடுத்து, ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. பின்னர் இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் 26-ம் தேதி ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் தடைவிதித்தது.
அதன் பின்னர் தற்போது 3 ஆண்டுகளுக்கு மீண்டும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் ஜெயலலிதா மரணம் வழக்கில் இன்று விசாரணையைத் தொடங்கியுள்ளது. இந்த விசாரணையில், ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர்களில் ஒருவரான பாபு மனோகர் வாக்குமூலமாக அறிக்கை சமர்ப்பித்துள்ளார். அந்த வாக்குமூலத்தில், “2016-ல் முதலமைச்சராக ஜெயலலிதா பதவியேற்கச் செல்லும் முந்தைய நாளில், மருத்துவர் சிவகுமாருடனான சந்திப்பின்போது தலைச்சுற்றல், மயக்கம், துணையில்லாமல் நடக்க முடியாத சூழலில் இருந்ததாக ஜெயலலிதா என்னிடத்தில் கூறினார். அதற்காகத் தினமும் ஓய்வெடுக்க வேண்டும் என்று ஜெயலலிதாவிடத்தில் கூறியிருந்தேன். ஆனால், ஜெயலலிதா, தனக்கு தினமும் 16 மணி நேரம் வேலை இருப்பதால் என்னால் ஓய்வெடுக்க முடியாது என்று மறுத்துவிட்டார்” என அப்போலோ மருத்துவர் பாபு மனோகர் கூறியுள்ளார்.