புதுடெல்லி: ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாக, கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. கடந்த 23ம்தேதி கச்சா எண்ணெய் விலையானது ஒரு பேரல் ₹99 டாலராக இருந்தது. ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாக நாளுக்கு நாள் உச்சம் தொட்டு வருகிறது. கடந்த 2ம் தேதி பேரல் 110 டாலராகவும், 3ம் தேதி 118 டாலராகவும் உயர்ந்தது. நேற்று முன்தினம் பேரல் 139.19 என்ற புது உச்சத்தை எட்டியது. 2008ம் ஆண்டுக்கு பிறகு ஏற்பட்ட உச்சபட்ச விலை இது என கூறப்படுகிறது. பின்னர், நேற்று ஸ்பாட் விலையாக 130 டாலருக்கு மேல் நீடித்த கச்சா எண்ணெய் பின்னர் 120 முதல் 125 டாலருக்குள் நீடித்தது.ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதிக்கு அமெரிக்கா, மற்றும் மேற்கத்திய நாடுகள் தடை விதிக்க திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவலால் இந்த நிலை ஏற்பட்டது. தடையால் ரஷ்யாவில் இருந்து எரிபொருள் விநியோகம் தடைபடும் பட்சத்தில் நடப்பாண்டு இறுதியில் கச்சா எண்ணெய் விலை ₹185 டாலர்களை எட்டும் என ஜே.பி.மார்கன் நிறுவனம் கணித்திருந்தது.கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்தும், 5 மாநில தேர்தல் காரணமாக விலை உயர்வு 122 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு நேற்றுடன் முடிந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயத்திற்கு எண்ணெய் நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன. கச்சா எண்ணெய் புதிய உச்சத்தால், ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் ஒரு சில வாரங்களிலேயே ₹15 முதல் ₹25 வரை உயர்த்தப்படலாம் என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.பங்குச்சந்தையில் ரூ.5.68 லட்சம் கோடிஒரே நாளில் இழப்பு: போரின் காரணமாக உலக அளவில் பங்கு சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. இதுமட்டுமின்றி முதலீடுகளை பல நாடுகளும் டாலர்களில் மாற்றி வருவதால் அதன் மதிப்பு உயர்ந்து பல நாடுகளின் பண மதிப்பு சரிந்து வருகிறது. இந்நிலையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு நேற்று வரலாறு காணாத அளவில் வர்த்தக முடிவில் ₹77.01 ஆக சரிவடைந்தது. இதுபோல் மும்பை பங்குச்சந்தை குறியீடு 1,491 புள்ளிகள் சரிந்ததால், பங்குச்சந்தையில் நேற்று ஒரே நாளில்₹5.68 லட்சம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டது. 4 நாளில் மட்டும் ₹11.28 லட்சம் கோடியை முதலீட்டாளர்கள் இழந்துள்ளனர்.