சென்னை:
தேசிய பங்குச் சந்தையின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக கடந்த 2013 ஏப்ரல் முதல் 2016 டிசம்பர் வரை செயல்பட்டவர் சித்ரா ராமகிருஷ்ணா. இவர் தனது பதவிக்காலத்தில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. தேசிய பங்குச் சந்தையின் ரகசிய தகவல்களை இமயமலையில் உள்ள ஒரு சாமியாரிடம் பகிர்ந்ததாகவும் கூறப்பட்டது. அந்த சாமியாரிடம் பல்வேறு ஆலோசனைகளை பெற்று நடவடிக்கை மேற்கொண்டதாகவும், அவரிடம் பங்குச்சந்தையின் ஏற்ற இறக்கங்கள், முன்கூட்டிய கணிப்பு உள்ளிட்டவற்றை பகிர்ந்து கொண்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்த வழக்கு விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், சித்ரா ராமகிருஷ்ணாவை நேற்று இரவு சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். அவரை 7 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இந்த நடவடிக்கை குறித்து தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், மோசடி வழக்கில் தேசிய பங்கு சந்தையின் முன்னாள் நிர்வாக இயக்குநர் சித்ரா ராமகிருஷ்ணன் கைது செய்யப்பட்டது குறித்து முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவிக்காமல் உள்ளாரே? ஏன்? கருத்து தெரிவிக்க முடியவில்லையா? கருத்தே இல்லையா?, என கேள்வி எழுப்பி உள்ளார்.