புதுச்சேரி: ‘அரசு மீது ஊழல் குற்றச்சாட்டு கூறும் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, அதற்கான ஆதாரத்தை வெளியிட வேண்டும்’ என அ.தி.மு.க., கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் கூறினார்.
அவர் நேற்று அளித்த பேட்டி: சமூக நீதி, சிறுபான்மையினர் பாதுகாப்பு என கூறும் தி.மு.க., தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில், மேயர், துணை மேயர் தேர்தலில் முஸ்லிம், கிறிஸ்தவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்காமல் துரோகம் இழைத்துள்ளது.
21 மாநகராட்சிகளில் மேயர், துணை மேயராக தேர்வு செய்யப்படடோரில் ஒருவர்கூட சிறுபான்மையினர் இல்லை. 2 கிறிஸ்தவர்களுக்கு மட்டும் துணை மேயர் பதவி வழங்கி, போலி மதசார்பின்மையை தி.மு.க., பேசி வருகிறது.முன்னாள் முதல்வர் நாராயணசாமி, என்.ஆர்.காங்., கூட்டணி அரசின் 300 நாள் சாதனையை தன் சாதனையாக பேசுவது நகைப்பாக உள்ளது.
5 ஆண்டுகள் மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாமல் இருந்துவிட்டு, தற்போது நாங்கள் கொண்டு வந்தோம் என கூறுவது மக்களை ஏமாற்றும் செயல்.என்.ஆர்.காங்., கூட்டணியின் வெளிப்படையான, ஊழலற்ற ஆட்சி நடக்கிறது. முன்னாள் முதல்வர் உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். அரசு மீது ஊழல் குற்றச்சாட்டு இருந்தால் அதற்கான ஆதாரத்தை வெளியிட வேண்டும். முறைகேடு தெரிவித்தால் அதன்மீது விசாரணை நடத்த அ.தி.மு.க., வலியுறுத்தும்.
கடந்த ஆட்சியில் நடந்த ஊழல்களை அப்போதைய கவர்னர் கிரண்பேடி, மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தார். அந்த முறைகேடு புகார்கள் மீது அரசு விசாரணை நடத்த வேண்டும். பொதுப்பணி துறையின் மெத்தனத்தால் துறைமுக பாலம் இடிந்து விழுந்துள்ளது. பொதுப்பணித்துறையின் செயல்பாடு கமிஷன், லஞ்சத்தில் போகிறது.
பல அதிகாரி பணியிடங்கள் காலியாக உள்ளது.தமிழகத்தை ஒப்பிடும்போது புதுச்சேரிக்கு வெள்ள நிவாரணமாக ரூ. 17 கோடி வழங்கப்பட்டது சற்று அதிகம் தான்.உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தமிழக மாணவர்களை மீட்க குழு அமைப்பது அரசியல் நாடகம். இது இந்திய அளவில் தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement