சென்னை:
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், கடந்த 05.03.2022 காலை, சென்னை வேளச்சேரியிலுள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் நீச்சல் குள வளாகத்தில், 61வது தமிழ்நாடு காவல் மண்டலங்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டியை துவக்கி வைத்தார்.
அதன்பேரில் 05.3.2022 மற்றும் 06.3.2022 ஆகிய 2 நாட்கள் நடைபெற்ற இப்போட்டியில் நீச்சல், Cross Country, சைக்கிளிங் (Cycling) ஆகிய 3 போட்டிகளில் ஆண் மற்றும் பெண்களுக்கென 6 பிரிவுகளிலும், தடை தாண்டுதல் (Obstacles)போட்டியில் ஆண்களுக்கென 1 பிரிவிலும் என மொத்தம் 7 பிரிவுகளில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இதில், சென்னை பெருநகர காவல்துறை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை (TSP), வடக்கு மண்டலம், தெற்கு மண்டலம், மேற்கு மண்டலம், மத்திய மண்டலம் மற்றும் கமாண்டோ படை (TNCF) என 7 அணிகள் கலந்து கொண்டன.
இப்போட்டியில், நீச்சல் போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் சென்னை பெருநகர காவல் அணி முதலாவதாகவும், Cross Country போட்டியில் ஆண்கள் பிரிவில் தமிழ்நாடு சிறப்புக் காவல் படை மற்றும் பெண்கள் பிரிவில் சென்னை பெருநகர காவல் அணி முதலாவதாகவும், சைக்கிளிங் பிரிவில் தமிழ்நாடு சிறப்பு காவல் படை மற்றும் பெண்கள் பிரிவில் மத்திய மண்டலம் முதலாவதாகவும், தடை தாண்டுதல் (Obstacles) போட்டியில், தெற்கு மண்டலம் முதலாவதாகவும் வெற்றி பெற்றது.
மேலும், புள்ளிகள் அடிப்படையில், சென்னை பெருநகர காவல் அணி இப்போட்டியின் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தில் (Overall Champion) 1வது இடம் பிடித்து பெருமை சேர்த்துள்ளது. தமிழ்நாடு சிறப்புக் காவல் படை 2வது இடம் பிடித்தது.
இன்று (07.03.2022) மாலை, எழும்பூர், இராஜரத்தினம் விளையாட்டரங்கில் நடைபெற்ற இப்போட்டியின் நிறைவு மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சியில், தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர் சி.சைலேந்திர பாபு மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் இணைந்து, இப்போட்டியில் வெற்றி பெற்ற ஆண் மற்றும் பெண் காவல் ஆளிநர்களுக்கு பதக்கங்கள் மற்றும் கோப்பைகள் வழங்கி பாராட்டினார்கள்.
இந்நிகழ்ச்சியில் காவல்துறை இயக்குநர்கள் திரு.A.K.விசுவநாதன் (தமிழ்நாடு காவல் வீட்டு வசதி கழகம்), கூடுதல் காவல் இயக்குநர் அபய்குமார் சிங் (ஆயதப்படை) சங்கர் (நிர்வாகம்), காவல்துறை தலைவர் (ஆயுதப்படை) எழிலரசன், சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர் முனைவர் J.லோகநாதன் (தலைமையிடம்), இணை ஆணையாளர்கள் B.சாமூண்டிஸ்வரி (தலைமையிடம்), S.பிரபாகரன் (கிழக்கு மண்டலம்), S.ராஜேஸ்வரி (மேற்கு மண்டலம்), ரம்யபாரதி (வடக்கு மண்டலம்), K.நரேந்திரன் நாயர் (தெற்கு மண்டலம்), துணை ஆணையாளர்கள், காவல் அதிகாரிகள் மற்றும் தமிழக காவல் மண்டலங்களில் இருந்து ஆண் மற்றும் பெண் காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டனர் .