புதுடெல்லி: உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதால், மத்திய அரசு ஆபரேஷன் கங்கா என்ற திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியர்களை மீட்டு வருகிறது.
எனினும், சுமி பகுதியில் தொடர்ந்து குண்டுகள் வீசப்படுவ தால் அங்குள்ள மாணவர்களை மீட்கும் பணியில் சிக்கல் உள்ளதாக வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை இணை செயலாளர் அரிந்தம் பக்ஷி கூறியதாவது:-
உக்ரைனில் இருந்து இதுவரை ஆபரேஷன் கங்கா திட்டத்தின் கீழ் 63 விமானங்களில் சுமார் 13,300-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்கப்பட்டு இந்தியாவுக்கு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 15 விமானங்கள் மூலம் 2,900 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் 13 விமானங்கள் இயக்கப்படுகின்றன.
கார்கிவில் இருந்து அனைத்து இந்தியர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். சுமியில் தொடர்ந்து குண்டுகள் வீசப்படுவதாலும் போக்குவரத்து பற்றாக்குறை காரணமாகவும் அங்குள்ள இந்திய மாணவர்களை மீட்பது சிக்கலாக இருக்கிறது. இந்திய மாணவர்கள் மீது மத்திய அரசு முழு அக்கறை கொண்டுள்ளது. அவர்கள் பாதுகாப்பாக திரும்பு வதற்கு போர் நிறுத்தம் அறிவிக்க உக்ரைன், ரஷ்யா அரசுகளுடன் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.