புதுடெல்லி:
உக்ரைனில் போர் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் இந்திய பிரதமர் மோடி இன்று சுமார் 50 நிமிடங்கள் தொலைபேசியில் பேசினார். அப்போது, உக்ரைன் மற்றும் ரஷியா இடையிலான பேச்சுவார்த்தையின் தற்போதைய நிலவரம் குறித்தும் இருவரும் விவாதித்தனர். மேலும் உக்ரைனின் சுமியில் இருந்து இந்தியர்கள் முடிந்தவரை சீக்கிரம் பாதுகாப்பாக வெளியேற்றப்படுவதன் முக்கியத்துவம் குறித்து பிரதமர் மோடி கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரஷியா மற்றும் உக்ரைன் படைகளுக்கு இடையேயான கடுமையான சண்டை நடைபெற்று வரும் நிலையில், சுமார் 700 இந்திய மாணவர்கள் சுமியில் சிக்கித் தவிக்கின்றனர்.
சுமி உட்பட உக்ரைனின் சில பகுதிகளில் போர்நிறுத்த அறிவிப்பு மற்றும் அப்பகுதிகளில் மக்கள் வெளியேற அனுமதிக்கும் வகையில் ராணுவ விலக்கலையும் பிரதமர் பாராட்டியதாக அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று புதினிடம் மோடி வலியுறுத்திதாகவும் கூறப்படுகிறது.