சென்னை: ”மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு மன அழுத்தம், வெர்டிகோ, தலைசுற்றல் பிரச்சினைகள் இருந்ததாக ஆறுமுகசாமி ஆணையத்தின் குறுக்கு விசாரணையில் பங்கேற்ற அப்போலோ மருத்துவர்கள் கூறினர்” என்று சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை இன்று முதல் மீண்டும் தொடங்கியது. இன்று நடந்த விசாரணைக்கு அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள் உள்ளிட்ட 5 பேர் ஆஜராகியிருந்தனர். அவர்களிடம் சசிகலா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் குறுக்கு விசாரணை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியது: “இன்று நீதியரசர் ஆறுமுகசாமி ஆணையத்தின் முன்பாக 5 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். சுமார் 3 ஆண்டுகளுக்குப் பின்னர், இந்த விசாரணை தொடங்கியிருக்கிறது. நான் ஏற்கெனவே பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியபடி, எந்த தாமதமும் இல்லாமல், சசிகலா தரப்பில் சாட்சிகளைக் குறுக்கு விசாரணை செய்துவிடுகிறேன் என கூறியிருந்தேன்.
அதன் அடிப்படையில், இன்று அப்போலோ மருத்துவமனையின் 4 மருத்துவர்கள் மற்றும் ஒரு தொழில்நுட்ப உதவியாளர் என மொத்தம் 5 பேர் வந்திருந்தனர். அவர்கள் 5 பேரிடமும் குறுக்கு விசாரணை முடிவு பெற்றது. இந்த குறுக்கு விசாரணையில், பத்திரிகையாளர் பிரதிநிதிகளாக இருவர் கலந்துகொண்டனர்.
இந்த சாட்சிகள் அனைவருமே இதே விசாரணை ஆணையத்தால், 2019-ம் ஆண்டில் ஏற்கெனவே விசாரிக்கப்பட்டு, சசிகலா தரப்பில் குறுக்கு விசாரணை நடத்த வேண்டும் என மனு அளித்து, அதன்படி விசாரணையில் கலந்து கொண்டவர்கள். அப்போலோ மருத்துவமனை உச்ச நீதிமன்றம் சென்றதால், விசாரணை தடைபட்டது. தற்போது உச்ச நீதிமன்ற தடை விலக்கப்பட்டதைத் தொடர்ந்து அப்போலோ மருத்துவர்கள் இன்று விசாரணைக்கு வந்தனர்.
விசாரணை ஆணையம் இரண்டு விதமான வழிகளில் நடைபெற்று வருகிறது. 22.9.2016-க்கு முன்பாக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு என்ன மருத்துவ குறைபாடுகள் இருந்தன, எந்த நோயால் அவர் பாதிக்கப்பட்டிருந்தார் என்பது குறித்தும், அதன்பின்னர், அப்போலோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்ட பிறகு 2016 டிசம்பர் 5-ம் தேதி வரை அவருக்கு என்ன மாதிரியான சிகிச்சை வழங்கப்பட்டது குறித்து விசாரிப்பது என இருந்தது.
இந்த சாட்சிகளில் பலரும், ஏற்கெனவே விசாரணையின்போது, ஜெயலலிதாவுக்கு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு, போயஸ் கார்டனில் அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை குறித்து சொல்லாத காரணத்தால், அவர்களை சாட்சிகளாக வரவழைத்து குறுக்கு விசாரணையில் கேள்விகள் கேட்கப்பட்டது.
இந்த தகவல்களை ஏன் அப்போதே கூறவில்லை என சாட்சிகளிடம் கேட்டதற்கு, தங்களிடம் யாரும் இந்தக் கேள்வியை கேட்கவில்லை என அவர்கள் தெரிவித்தனர். அதன்பிறகு, மருத்துவர்கள் பாபு மனோகர், அருள் செல்வம் ஆகிய இரண்டு மருத்துவர்களும் விவரித்தனர். ஏற்கெனவே போயஸ் கார்டனில், குறிப்பாக இரண்டாவது முறையாக 2016-ல் ஜெயலலிதா முதல்வராக பதவியேற்பதற்கு ஒருநாளுக்கு முன்பாக, ஒரு மாதம் கழித்து என்கிற தருவாயில், ஜெயலலிதாவை ஒரு மருத்துவர் மூன்று முறை பார்த்ததாகவும், இன்னொருவர் ஒரு முறை மட்டும் பார்த்ததாகவும் கூறினர்.
இந்த இரண்டு மருத்துவர்களும் ஜெயலலிதாவுக்கு மன அழுத்தம் , வெர்டிகோ பிரச்சினை, நடக்கும்போது தலை சுற்றல் பிரச்சினை இருந்ததாகவும், எதையாவது பிடித்துக் கொண்டுதான் நடக்க வேண்டும் என்பது போன்ற உடல் உபாதைகள் அவருக்கு இருந்தன என்றும் கூறினார்கள்.
மேலும், சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், மன அழுத்தங்கள் இல்லாமல் இருக்க வேண்டும். ஓய்வு எடுக்க வேண்டும் என்றும், ஊட்டி அல்லது சிறுதாவூருக்கு சென்று ஓய்வெடுக்க வேண்டும் என்றும் ஜெயலலிதாவுக்கு, மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியதாக தெரிவித்தனர். அதற்கு ஜெயலலிதா, ’நான் 16 மணி நேரம் உழைத்துக் கொண்டிருக்கக்கூடிய ஒரு முதல்வர். நான் மக்கள் பணி செய்ய வேண்டியிருக்கிறது. அப்படி நான் அங்கு செல்ல வேண்டியிருந்தால், அனைவரையும் அழைத்துச் செல்ல வேண்டும். கோப்புகளை எல்லாம் எடுத்துச் செல்ல வேண்டும். மக்கள் பணியில் இருப்பதால் என்னால் செல்ல முடியாது’ என கூறியதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மருத்துவர் பாபு மனோகர், ஜெயலலிதாவிடம் நடக்க வேண்டும் என்றும், அப்படி நடந்தால், மன அழுத்தப் பிரச்சினைகள் தீரும் என கூறியதாகவும், அதனை ஜெயலலிதா கேட்டுக் கொண்டதாகவும் தெரிவித்தார். மேலும், ஜெயலலிதாவுக்கு என்னென்ன பிரச்சினைகள் இருந்தன என்பது குறித்து மருத்துவர்கள் தெரிவித்தனர். 2014-ல் தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டு முதல்வராக இருந்தவர் சிறைச்சாலைக்கு சென்ற பிறகுதான், ஜெயலலிதாவுக்கு மன அழுத்தம் வந்தது. இதை ஏற்கெனவே சிகிச்சையளித்த மருத்துவரும் கூறியிருந்தார்.
டிரெக்காஸ்டமி என சொல்லப்படுகிற குரல் அறுவை சிகிச்சைக்காக 22.9.2016 அன்று ஜெயலலிதா மருத்துவமனையில் அனமதிக்கப்படுகிறார். அதன்பிறகு 7.10.2016 அதிகாலையில் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.
இன்று நடந்த விசாரணையை 8 பேர் அடங்கிய எய்ம்ஸ் மருத்துவக் குழு காணொலி வாயிலாக நடந்த அனைத்து நடவடிக்கைகளையும் பார்த்துக் கொண்டிருந்தனர்.
இதில் கலந்துகொள்ளாத வேறு 8 மருத்துவர்கள் வந்துதான் மத்திய அரசின் உத்தரவின் அடிப்படையில், எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் வழிகாட்டுதலின்படி ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது 9 முறை வந்து பார்த்துள்ளனர். இவர்களின் பரிந்துரைப்படிதான் டிரெக்காஸ்டமி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. காது மூக்கு தொண்டை நிபுணரால்தான் அறுவை சிகிச்சை செய்யப்படவேண்டும். அதுவும் அறுவை சிகிச்சைக் கூடத்தில்தான் செய்ய வேண்டும் என்ற ஆவணங்களை அனைத்தையும் காண்பித்து, இந்த சிகிச்சை எய்ம்ஸ் மருத்துவர்களின் கண்காணிப்பில்தான் செய்யப்பட்டது என்கிற விஷயத்தையும், 4.12.2016 அன்று ஏற்பட்ட மாரடைப்பு எப்படிப்பட்ட தருவாயில் ஏற்பட்டது, அது எப்படி உடனடியாக ஜெயலலிதாவுக்கு வந்தது, மருத்துவ ரீதியாக அதன் பெயர் என்ன உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விசாரித்தோம்.
சசிகலாவின் முன்னெடுப்பின் அடிப்படையில், ஜெயலலிதாவின் தனிப்பட்ட மருத்துவர் சிவக்குமாரின் முயற்சியில் 20 மருத்துவர்கள் மருத்துவமனைக்கு செல்லும் முன் போயஸ் கார்டனில் வந்து சிகிச்சையளித்துள்ளனர். இதில் 10 மருத்துவர்கள் அப்பல்லோ மருத்துவர்கள். இவர்கள் அனைவரும் சிகிச்சையளித்துள்ளனர். இவையெல்லாம் இன்று ஆதாரபூர்வமாக கொண்டுவரப்பட்டது.
2017-ல் மார்ச் மாதம் சசிகலா சமர்ப்பித்த அறிக்கையில் இருக்கின்ற தகவல்களை மெய்ப்பிக்கும் வகையில் இன்று விசாரணைக்கு ஆஜரான மருத்துவர்கள தெரிவித்தனர்” என்று அவர் கூறினார்.