சென்னை
தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் வேகமாகக் குறைந்து வருகிறது.
இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. முதல் மற்றும் இரண்டாம் அலை பாதிப்புக்கள் வெகு நாட்கள் நீடித்த நிலையில் தற்போதைய 3ஆம் அலை கொரோனா பாதிப்பு வேகமாகக் குறைந்து வருகிறது. இந்நிலை தமிழகத்திலும் காணப்படுகிறது.
கொரோனா பரவலில் அகில இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் இருந்த தமிழகம் சிறிது சிறிதாக மீண்டு வந்தது. இரண்டாம் அலை கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து பிறகு குறைந்து வந்த வேளையில் மூன்றாம் அலை பாதிப்பு தொடங்கியதால் மக்கல் கடும் பீதி அடைந்தனர்.
ஆனால் மூன்றாம் அலை கொரோனா பாதிப்பு வேகமாகக் குறைந்துள்ளது. நேற்று தமிழகத்தில் 196 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 7 மாவட்டங்களில் ஒருவருக்கு கூட பாதிப்பில்லை. மேலும் 28 மாவட்டங்களில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10க்கும் குறைவாக ஒற்றை இலக்கத்தில் உள்ளது.
தமிழகத்தில் பாதிப்பு சதவிகிதம் 1%க்கும் மிகவும் குறைவாக அதாவது 0.3% ஆக உள்ளது. அதிலும் ஒரு சில மாவட்டங்களில் 0% ஆகவே குறைந்துள்ளது. சென்னையில் மட்டுமே அதிகபட்ச பாதிப்பு காணப்படுகிறது. சென்னையில் 62 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது 0.8% ஆகும்.