மதுரை மாவட்டம் டி.கல்லுப்ட்டி பேரூராட்சி 10-வது வார்டில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளரின் வெற்றியை மறைத்து தி.மு.க வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவித்த சம்பவம் அப்போது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட சுயேச்சை வேட்பாளர் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக மாநிலத் தேர்தல் ஆணையம் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி பேரூராட்சி 10-வார்டில் போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர் சுப்புலட்சுமியும், சுயேச்சை வேட்பாளர் பழனிச்செல்வியும் தலா 284 வாக்குகள் பெற்று சமமாக இருந்ததால், குலுக்கல் மூலம் தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது. அதில் சுயேச்சை வேட்பாளர் பழனிச்செல்வியே வெற்றி பெற்றிருக்கிறார். அதை உடனே தேர்தல் ஆணைய இணையதளத்தில் அதிகாரிகள் பதிவேற்றினார்கள்.
ஆனால், சிறிது நேரத்தில் தி.மு.க வேட்பாளர் சுப்புலட்சுமி வெற்றி பெற்றதாக அறிவித்து பழனிச்செல்வியை அங்கிருந்து வெளியேற்றி உள்ளனர். இந்த முறைகேடு குறித்து மதுரை கலெக்டரிடம் பழனிச்செல்வி முறையிட்டார். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்காததால், தேர்தல் அதிகாரி பிறப்பித்த அறிவிப்பை ரத்து செய்து, தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும் என பழனிச்செல்வி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அவரின் மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், மாவட்ட நிர்வாகம் தரப்பில் தாக்கல் செய்த வீடியோ பதிவுகளை ஆய்வு செய்து முறைகேடு நடந்துள்ளதை உறுதி செய்தது. மேலும், “சம்பந்தப்பட்ட தேர்தல் அலுவலர் கட்சி பிரமுகர் போல் செயல்பட்டு தவறான தேர்தல் முடிவை அறிவித்துள்ளார். அதனால், அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு கடந்த 3-ம் தேதி உத்தரவிட்டது.
உடனே சுதாரித்துக்கொண்ட மாவட்ட நிர்வாகம், சம்பந்தப்பட்ட தேர்தல் அலுவலர் மூலம் சுயேச்சை வேட்பாளர் பழனிச்செல்வி வெற்றி பெற்றதாக சான்றிதழை நள்ளிரவில் சென்று வழங்கியது.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் முடிவை மாற்றி அறிவித்த தேர்தல் அலுவலரை சஸ்பெண்ட் செய்துள்ளதாகவும், தி.மு.க வேட்பாளரை வெற்றி பெற்றதாக அறிவித்த உத்தரவு திரும்பப்பெறப்பட்டு, 10-வது வார்டு கவுன்சிலராக மனுதாரர் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த தேர்தல் அலுவலர், “தி.மு.க வேட்பாளரின் ஆதரவாளர்கள் அளித்த அழுத்தம் காரணமாக முடிவை மாற்றி அறிவித்தேன்” என்று தெரிவித்தார்.
இதை பதிவுசெய்த நீதிபதிகள், “அழுத்தம் கொடுத்தது யார்? என்ன மாதிரியான அழுத்தம்?” என்பது குறித்து மனுவாக தாக்கல் செய்ய தேர்தல் அலுவலர் தரப்புக்கு உத்தரவிட்டு விசாரணையை 10 நாள்களுக்கு தள்ளி வைத்தனர்.