டெல்லி: தேசிய பங்குச் சந்தை முன்னாள் நிர்வாக இயக்குநர் சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு 7 நாள் சிபிஐ காவல் விதித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேசிய பங்கு சந்தையின் (என்எஸ்இ) நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக (சிஇஓ) கடந்த 2013ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2016ம் ஆண்டு டிசம்பர் வரை சித்ரா ராமகிருஷ்ணா செயல்பட்டார். இந்த கால கட்டத்தில் இமயமலையில் வசித்த சாமியார் ஒருவரிடம் பல்வேறு ஆலோசனைகளை பெற்று நடவடிக்கை மேற்கொண்டதாகவும், அவரிடம் பங்குச்சந்தையின் ஏற்ற இறக்கங்கள், முன்கூட்டியேகணிப்பு உள்ளிட்டவற்றை பகிர்ந்து கொண்டதாகவும் இவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. சித்ரா ராமகிருஷ்ணாவின் பதவிக் காலத்தில் இமயமலை சாமியார்தான் தேசிய பங்குச் சந்தையின் தலைமை அதிகாரிபோல் செயல்பட்டதாகவும், சாமியாரின் கைபொம்மையாக சித்ரா ராமகிருஷ்ணா இருந்தார் எனவும் இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) குற்றம் சாட்டியிருந்தது. மேலும், இமயமலை சாமியாரின் ஆலோசனைப்படி, ஆனந்த் சுப்பிரமணியன் என்பவரை தேசிய பங்குச் சந்தையின் தலைமை திட்ட ஆலோசகராக நியமித்து அவருக்கு பலமுறை ஊதிய உயர்வு வழங்கியதாகவும் சித்ரா ராமகிருஷ்ணா மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக ‘செபி’ தரப்பில் சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ரூ. 3 கோடி அபராதமும், பங்குச் சந்தை நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு 3 ஆண்டுகள் தடையும் விதிக்கப்பட்டது. மேலும், சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு சொந்தமான இடங்களில் சோதனையும் நடைபெற்றது. கடந்த சில வாரங்களாக இவ்விவகாரம் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கடந்த 25ம் தேதி சிபிஐ அதிகாரிகளால், முன்னாள் தலைமை திட்ட ஆலோசகர் ஆனந்த் சுப்பிரமணியன் சென்னையில் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து, சித்ரா ராமகிருஷ்ணா முன்ஜாமீன் கேட்டு ெடல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நேற்று முன்தினம் சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் அகர்வால் விசாரித்து, சித்ரா ராமகிருஷ்ணாவின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அப்போது அவர் கூறுகையில், ‘வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது கடுமையான புகார்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. விசாரணையை சிபிஐ மிகவும் மெதுவாக மேற்கொண்டு வருகிறது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது 4 ஆண்டுகளாக எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. அவர்களை ‘செபி’ கனிவாக கவனித்துக் கொண்டது. பொருளாதாரம் சார்ந்த குற்றச்சாட்டுகளில் சூழ்ச்சி அதிகம் இருக்க வாய்ப்புள்ளது. இந்த வழக்கில் மக்களின் வரிப் பணம் அதிக அளவில் வீணாகியிருக்க வாய்ப்பிருப்பதால், அதன் மீது அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும். இந்த வழக்கு நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. எனவே, என்எஸ்இ-யின் முக்கிய பொறுப்பில் இருந்துள்ளதால், வழக்கு தொடர்பான சாட்சியங்களை மனுதாரர் (சித்ரா ராமகிருஷ்ணா) அழிப்பதற்கு முயற்சிக்கக் கூடும். இந்த வழக்கில் சிபிஐ விரிவான விசாரணை நடத்த வேண்டியுள்ளது. ஒட்டுமொத்த சூழலையும் கருத்தில் கொண்டு மனுதாரருக்கு முன்ஜாமீன் மறுக்கப்படுகிறது. மனுவும் தள்ளுபடி செய்யப்படுகிறது’ என்றார். முன் ஜாமீன் மனு தள்ளுபடியானதால் எந்த நேரத்திலும் சித்ரா ராமகிருஷ்ணாவை சிபிஐ கைது செய்யும் என்று பரபரப்புடன் பேசப்பட்டு வந்த நிலையில், நேற்றிரவு டெல்லியில் அவரை சிபிஐ கைது செய்தது. அதனை தொடர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ கோர்ட்டுக்கு இன்று அழைத்து வந்து நீதிபதிகள் முன் ஆஜர்படுத்தினர். தேசிய பங்கு சந்தை மற்றும் செபி அதிகாரிகள் முன் அவரை ஆஜர்படுத்த வேண்டும் என்றும் அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் எனவும் கோரி, 14 நாட்கள் விசாரணை காவலுக்கு அனுமதி அளிக்க கோரி நீதிபதிகளிடம் சி.பி.ஐ. முறையிட்டது. சித்ரா ராமகிருஷ்ணாவை 7 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்தது.