டெல்லி: தேசிய பங்குச் சந்தை முறைகேடுகள் தொடர்பான இன்று காலை சிபிஐ அதிகாரிகளால் டெல்லியில் கைது செய்யப்ட்ட முன்னாள் தேசிய பங்குச்சந்தை நிர்வாக இயக்குநர் சித்ரா ராமகிருஷ்ணனுக்கு நீதிமன்றம் 7 நாள் சிபிஐ காவல் வழங்கி உள்ளது.
தேசிய பங்குச் சந்தை நிர்வாக இயக்குநராக 2013 முதல் 2016 ஆண்டு வரை சித்ரா ராமகிருஷ்ணா பணிபுரிந்து வந்தார். அவரது பணிக்காலத்தின்போது, தமிழகத்தைச் சேர்ந்த ஆ்னந்த் சுப்பிரமணியன் என்பவரை நிர்வாக செயலாக்க அதிகாரியாக நியமித்ததில் முறைகேடு நடைபெற்றதாக கூறப்படுகிறது. மேலும், அரசு தொடர்பான நிகழ்வுகளை இமயமலை சாமியார் ஒருவருடன் பகிர்ந்துகொண்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இதையடுத்து, மும்பையில் உள்ள சித்ரா ராமகிருஷ்ணன் வீடு உள்பட அவர் தொடர்புடைய அலுவலகங்களில் மும்பை வருமான வரி புலனாய்வு அதிகாரிகள் கடந்த பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி சோதனை மேற்கொண்டனர். இதேபோல ஆனந்த் சுப்பிரமணியத்திற்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடந்தன. அதையடுத்து, கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி நள்ளிரவு ஆனந்த் சுப்ரமணியம் கைது செய்யப்பட்டார். அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், பங்கு சந்தை முறைகேடு தொடர்பாக கைது செய்யப்படலாம் என அஞ்சிய சித்ரா ராமகிருஷ்ணன் முன்ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்தார். அவரது மனுவை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனைத் தொடர்ந்து நேற்று நள்ளிரவு (மார்ச் 07) டெல்லியில் சித்ரா ராமகிருஷ்ணனை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
இது தொடர்பாக அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், இன்று பிற்பகல் 3மணி அளவில்சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, நீதிமன்றத்தில் 14 நாள் சிபிஐ காவல் விசாரணைக்கு அனுமதி கோரி சிபிஐ மனுத்தாக்கல் செய்தது. ஆனால் நீதிமன்றம் 7 நாள் சிபிஐ விசாரணைக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டது.
அதுபோல தேசிய பங்குச் சந்தையின் (என்எஸ்இ) முன்னாள் குழு இயக்க அதிகாரி ஆனந்த் சுப்ரமணியனின் சிபிஐ காவலை மார்ச் 9ஆம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.