கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் ‘துருவ நட்சத்திரம்’ படம் கடந்த 2017ம் ஆண்டு துவங்கியது. இப்படத்தில் விக்ரம், ரிதுவர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிம்ரன், பார்த்திபன், அர்ஜுன் தாஸ், ராதிகா உள்பட பலரும் நடித்துள்ளனர். முதல் ஷெட்யூல் படப்பிடிப்பு துருக்கியில் ஆரம்பித்து, சில நாடுகளில் நடந்தது.
த்ரில்லர் ஜானரான இந்தக் கதையை ரஜினியிடம்தான் முதலில் சொன்னார் கௌதம். ரஜினிக்கும் இந்தக் கதை பிடித்திருந்தது. ஆனால், ஏனோ டேக் ஆஃப் ஆகவில்லை. அந்தக் கதையில்தான் விக்ரம் கமிட் ஆனார். கௌதமின் த்ரில்லர், ஹாரிஸ் ஜெயராஜின் இசை என மேஜிக் கூட்டணி இருந்ததால் படம் ஆரம்பித்த சில நாள்களிலேயே எதிர்பார்ப்புகள் எகிறின.
இதற்கிடையே படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான கௌதம், நிதி நெருக்கடியில் சிக்கினார். தவிர வெளிநாடுகளில் படப்பிடிப்பு என்பதால் எகிறிய பட்ஜெட் மற்றும் நிதி பிரச்னை உள்பட சில காரணங்களினால் ஒவ்வொரு ஷெட்யூல் படப்பிடிப்பும் தடைகளுக்கு பின்னரே நிறைவு பெற்றது. அதாவது ஐசரி கணேஷ் தயாரிப்பாளராகக் களத்தில் குதித்த பின்னர்தான் படத்தை முடிக்கும் வேலைகளில் இறங்கினார் கௌதம். ஆனாலும் அதற்குள் விக்ரம் நடித்த ‘ஸ்கெட்ச்’, ‘மகான்’ படங்கள் ரிலீஸ் ஆகிவிட்டன. ‘கோப்ரா’, ‘பொன்னியின் செல்வன்’ என அடுத்தடுத்த படங்களும் ரிலீஸுக்கு ரெடியாகிவிட்டன.
ஐந்தாண்டுகளுக்குப் பிறகு ‘துருவ நட்சத்திரம்’ திடீர் வேகம் எடுத்திருக்கிறது. இப்போது படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்த நிலையில் இன்னும் சில நாள்கள் சென்னையில் பேட்ச் ஒர்க் வேலைகள் மட்டும் இருக்கிறது என்கிறார்கள்.
இதற்கிடையே படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் மற்றும் டப்பிங் வேலைகளையும் தொடங்கிவிட்டனர். நேற்று முதல் விக்ரம் டப்பிங் பேசி வருவதாகவும், நாளை அவரது போர்ஷன் டப்பிங் முடிந்துவிடும் என்றும் சொல்கிறார்கள். விக்ரமின் ‘கோப்ரா’வை தொடர்ந்து ‘பொன்னியின் செல்வன்’ வெளியாகும் நிலையில் அவை இரண்டிற்கும் இடைப்பட்ட ஒரு தேதியில் ‘துருவ நட்சத்திரம்’ படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். அடுத்த மாதம் டீசர் ஒன்று வெளியிடவும் முடிவு செய்திருக்கிறார்கள்.