திருவனந்தபுரம் ஜோஸ்கோ நகைக்கடையில் வரவேற்பாளராக வேலைப்பார்த்த பெண் ஒருவர், ஓட்டலின் படுக்கை அறையில் சடலமாக கிடந்த சம்பவத்தில் அவருடன் தங்கி இருந்த திருவண்ணாமலை கடை ஊழியரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ரகசியமாக தாலி கட்டிய போது எடுத்த புகைப்படத்தை வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸா வைத்ததால் நிகழ்ந்த விபரீத கொலை சம்பவம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.
திருவனந்தபுரம் அடுத்த தம்பானூரில் உள்ள ஓட்டல் ஒன்றின் படுக்கை அறையில் இளம் பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். அவரது சடலத்தை கைப்பற்றிய போலீசார் விசாரணையை முன்னெடுத்தனர்.
அந்த அறை, ஜோஸ்கோ நகைக்கடையில் பணிபுரிந்துவரும் பிரவீன் என்பவரின் பெயரில் முன்பதிவு செய்யப்பட்டிருந்தது. முதலில் அவர் மட்டும் வந்து தங்கி இருந்த நிலையில் அறைக்குள் பெண் சடலம் வந்தது எப்படி ? என்ற கோணத்தில் விசாரித்த போலீசாரின் பிடியில் பிரவீன் சிக்கியதால் நகைக்கடை நாடக காதலால் நிகழ்ந்த விபரீத சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.
பிரவீன் வேலைபார்த்து வந்த திருவனந்தபுரம் ஜோஸ்கோ நகைக்கடையில் வரவேற்பாளராக பணிபுரிந்து வந்தவர் காயத்திரி. ஏற்கனவே திருமணமாகி இரு குழந்தைகள் உள்ள பிரவீனுக்கு , 24 வயதான காயத்திரி மீது காதல் ஏற்பட்டுள்ளது. அடிக்கடி தனிமையில் சந்தித்து காதலை வளர்த்து வந்த இந்த ஜோடியின் செல்பி புகைப்படத்தால் இவர்களது காதல் விவகாரம் பிரவீனின் மனைவிக்கு தெரியவந்தது, அவர் கடை நிர்வாகத்திடம் நேரடியாக புகார் செய்தார்.
இதையடுத்து பிரவீனை திருவனந்தபுரத்தில் இருந்து திருவண்ணாமலையில் உள்ள கடைக்கு மாற்றிய நிர்வாகம், அடுத்தவர் கணவன் என தெரிந்தும் காதலித்த காயத்திரியை பணியில் இருந்து நீக்கியது. இதையடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி காயத்திரி பிரவீனுக்கு அழுத்தம் கொடுத்துள்ளார்.
தனது மனைவியை விவாகரத்து செய்து விட்டு திருமணம் செய்து கொள்கிறேன் என்று சில நாட்கள் இழுத்தடித்தபடியே காதலியுடன் பிரவீன்ஊர் சுற்றிவந்த வந்ததாக கூறப்படுகின்றது. ஒரு கட்டத்தில் காதலி காயத்திரியை சமாதானம் செய்வதற்காக அந்த பகுதியில் உள்ள சர்ச் ஒன்றிற்கு அழைத்துச்சென்று அதன் வெளியில் நின்று சம்பிரதாயத்துக்காக தாலி கட்டியுள்ளார் பிரவீன்.
தனது திருமணத்துக்கு சாட்சியாக அதனை அருகில் இருந்தவர் மூலமாக காயத்திரி செல்போன் கேமராவில் புகைப்படம் எடுத்து வைத்துக் கொண்டதாக கூறப்படுகின்றது.
இந்த திருமண விவகாரம் யாருக்கும் தெரியக்கூடாது என்று பிரவீன் கண்டிப்பாக கூறி உள்ளார் . இந்த நிலையில் தனது திருமணத்தை நகைக்கடையில் உள்ள தோழிகளுக்கு சொல்லும் விதமாக பிரவீன் தாலிகட்டும் புகைப்படத்தை வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் ஆக வைத்துள்ளார் காயத்திரி.
இந்த ரகசிய திருமண விவகாரம் பிரவீன் வேலை பார்க்கும் நகைக்கடை நிர்வாகத்திற்கும் தெரிந்து விட்டது. இதையடுத்து தனது வேலை பறிபோய் விடுமே என்ற ஆத்திரத்தில் திருவனந்தபுரம் தம்பானூர் ஓட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கிய பிரவீன், காதல் மனைவி காயத்திரியை செல்போன் மூலம் அழைத்து அங்கு வரவழைத்துள்ளார். ஓட்டல் நிர்வாகத்தினர் அசந்த நேரத்தில் காயத்திரியை தனது அறைக்கு அழைத்துச்சென்றுள்ளான் பிரவீன்.
அங்கு வைத்து வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் விவகாரம் தொடர்பாக கேட்ட போது இருவருக்குமிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. காதலித்து ஜாலியாக ஊர் சுற்றிவிட்டு கழட்டி விட்டுவிடலாம் என்று நினைத்த தனது நாடக காதல் , நிஜமாகவே திருமணத்தில் முடிந்ததால், அந்த ஏமாற்றத்தை தாங்கிக் கொள்ள இயலாமல் ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற பிரவீன், காயத்திரியை கழுத்தை நெரித்து கொலை செய்ததாகவும், அவரது சடலத்தை படுக்கையில் கிடத்திவிட்டு அறையை பூட்டிவிட்டு தப்பிச்சென்றதாகவும் வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். பிரவீனை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
அழகான மனைவி அன்பான குழந்தைகள் இருக்க திருமணம் கடந்த உறவை தேடிச்சென்றால் என்ன மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு இந்த சம்பவமே சாட்சி.